15வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - அரசுக்கு கோரிக்கை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 4, 2024

15வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - அரசுக்கு கோரிக்கை!

 இடைநிலை ஆசிரியர்கள் 'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு 15வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் அரசு தங்களை அழைத்து பேச இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு 15வது நாளாக இன்று (மார்ச்.4) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் 15 நாட்களாக நீடித்தும் அரசுத் தரப்பில் இதுவரை முதல் கட்ட பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை எனவும், தொடர்ந்து கைது செய்வதிலேயே தீவிரம் காட்டுவதாகவும், அரசுத் தரப்பில் விரைந்து அழைத்துப் பேசி கோரிக்கை குறித்து ஒரு நல்ல முடிவை எட்ட வேண்டும் எனவும் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


முன்னதாக, தமிழ்நாட்டிலுள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் 1-க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது. இதைக் களையக்கோரி பல்வேறு போராட்டங்களை இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.


கடந்த அதிமுக ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக அறிக்கையில், வரிசை எண் 311இல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.


தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் அறிவிப்பாக, போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு, அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.


ஆனால் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்த நிலையில் 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, கடந்த பிப்.19ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.Post Top Ad