12ம் வகுப்பு வேதியியல் தேர்வில் 8 'போனஸ்' மதிப்பெண் - மாணவர்கள் கோரிக்கை - Asiriyar.Net

Tuesday, March 12, 2024

12ம் வகுப்பு வேதியியல் தேர்வில் 8 'போனஸ்' மதிப்பெண் - மாணவர்கள் கோரிக்கை

 



பிளஸ் 2 வேதியியல் பொதுத் தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத மற்றும் முழுமையடையாத வினா என 8 மதிப்பெண்களுக்கு குழப்பமாக கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


நேற்று நடந்த வேதியியல் தேர்வில் மூன்று மதிப்பெண் பகுதியில் 'அணைவு சேர்மங்கள்' என்ற 5வது பாடத்தில் இருந்து 33வது வினா கேட்கப்பட்டது. அந்த வினா பாடத்தில் இடம் பெறாதது.


இதுபோல் 5 மதிப்பெண் பகுதியில் 38 வது வினா 'ஆ' பிரிவில் 'நைட்ரஜன் சேர்மங்கள்' என்ற13வது பாடத்தில் இருந்து இடம் பெற்றுள்ளது. அந்த வினாவில் 'சேர்மம் (சி) ஆனது அடர் ஹெச்.சி.எல்., (ஹைட்ரோ குளோரிக் அமிலம்) உடன் வினைபுரிந்து...' என்ற வரி இடம் பெற்றுள்ளது. 


ஆனால் அந்த வரியில் 'சேர்மம் (சி) ஆனது அடர் ஹெச்.சி.எல்., (ஹைட்ரோ குளோரிக் அமிலம் ) மற்றும் நீருடன் உடன் வினைபுரிந்து... என கேட்டிருக்க வேண்டும். 'நீருடன் வினை புரிந்து' என்ற வார்த்தைகள் இல்லை. 


மேலும் '675 கெல்வினுடன் வினைபுரிந்து' என்ற வார்த்தையும் இடம் பெறாமல் அந்த வினா முழுமை பெறாமல் உள்ளது. இதுபோன்ற குழப்பங்களால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.


வேதியியல் பாட ஆசிரியர்கள் கூறுகையில், இத்தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 5 வினாக்கள் யோசித்து எழுதும் படி கேட்கப்பட்டுள்ளது. இதுபோல் 8 மதிப்பெண்களுக்கு பாடத்திட்டத்தில் இல்லாத மற்றும் முழுமை பெறாத வினாக்களாக கேட்கப்பட்டுள்ளது. வினாத்தாள் தயாரிப்பு குழு மனசாட்சியின்றி கல்லுாரி மாணவர்களுக்கான தரத்தில் தயாரித்துள்ளது ஏற்கமுடியாது.


இது மாணவர்களை சோர்வடைய வைத்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறைக்கு மாவட்டங்கள் வாரியாக தெரியப்படுத்தியுள்ளோம்.


மாணவர்களின் உணர்வுகளை மதித்து 8 மதிப்பெண்களை 'போனஸ்' மதிப்பெண்ணாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Post Top Ad