பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்த சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரையில் இன்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தில் நடைபெற்றது. இதற்கு அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், ''தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உரிமைகளை பறித்து, நிதி மேலாண்மை எனக் காரணம் கூறி அரசுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுகளை வேகமாக்கும் நிதி அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி ஏப்.12-ல் சட்டமன்ற கட்சித் தலைவர்களைச் சந்தித்து முறையீடப்படும்.
மேலும், நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் சிபிஎஸ் ரத்து செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியிடாத நிலையில் ஏப்.19-ல் ஓய்வூதியம் தொடர்பான மானியக் கோரிக்கையின்போது ஏப்.17-ல் மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு பேரணி, ஏப்.19-ல் உண்ணாவிரதம், ஜூன் 27-ல் தற்செயல் விடுப்பு போராட்டங்கள் நடத்தப்படும்.
இந்திய அளவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கும் பழைய ஓய்வூதியத்திட்ட தேசிய அமைப்புடன் இணைந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்'' என தீர்மானிக்கப்பட்டது. இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வகுமார் நிறைவுரையாற்றினார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment