'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்திற்காக அண்மையில் பல மாவட்டங்களுக்கு முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு அரசுத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனையிலும் ஈடுபட்டு வந்தார். இதன் ஒரு பகுதியாக ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 25 மற்றும் 26-ம் தேதியில் ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வரின் கள ஆய்வுக்கு பிறகு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குனர் மாற்றப்பட்டு புதிய இயக்குனராக எஸ்.செல்வராணி, கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் மாற்றப்பட்டு புதிய வருவாய் அலுவலராக ராஜசேகரன், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சரஸ்வதி மாற்றப்பட்டு புதிய அலுவலராக கிருஷ்ணபிரியா மற்றும் விழுப்புரம் நகர டி.எஸ்.பி. பார்த்திபனையும் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி.சரஸ்வதி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கோ.கிருஷ்ணபிரியா பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், விழுப்புரம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மற்ற மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும்போதும் முதல்வருக்கு அதிகாரிகள் மீது அதிருப்தி ஏற்பட்டால் இந்த அதிரடி மாற்றங்கள் தொடரும் என்கிறது தலைமைச் செயலக வட்டாரம்.
No comments:
Post a Comment