12 மணி நேர பணி நேரம் - தமிழ்நாடு அரசின் விளக்கம்! - Asiriyar.Net

Saturday, April 22, 2023

12 மணி நேர பணி நேரம் - தமிழ்நாடு அரசின் விளக்கம்!

 




தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதாவால் தொழிலாளர்களுக்கான பணி நேரம், வார விடுமுறை உள்ளிட்டவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது. தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இது நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர்கள் சி.வி. கணேசன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் தெரிவித்தனர்.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா-2023 இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மசோதா குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு சி.வி. கணேசன் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.


அப்போது பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ‘தற்போது நடைமுறையில் உள்ள 1948ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும். வாராந்திர மற்றும் தினசரி வேலை நேரம், வரம்புமுறைகள், ஓய்வு, இடைவேளை மிகை நேரம், பணிக்கான சம்பளம், வாராந்திர விடுமுறை உள்ளிட்டவைகள் எந்த மாற்றமும் இன்றி தற்போது நடைமுறையில் இருப்பது தொடர்ந்து நீடிக்கும். திருத்தி அமைக்கப்பட்டுள்ள 65 ஏ இன் கீழ் விதிவிலக்கு கோரும் நிறுவனங்கள் அல்லது கட்டுப்பாடுகளுடன் தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில் தொழிலாளர்களின் ஒப்புதலுடன் மட்டுமே நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.


குறிப்பாக இந்த சட்டத்திருத்தம் என்னவென்றால் எந்தவித தொழிற்சாலையாக இருந்தாலும் நிறுவனமாக இருந்தாலும் அங்கு பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இது நடைமுறைப்படுத்தப்படும். தொழிலாளர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் நிச்சயமாக அரசு பரிசீலனை செய்து ஆய்வு செய்துதான் நடைமுறைப்படுத்தும்.


வாரத்தில் 48 மணி நேர வேலை நாட்கள் இதில் எந்த மாற்றமும் இல்லை. அது தொடர்ந்து நீடிக்கும். எல்லா நிறுவனங்களுக்கும் இந்த சட்ட திருத்தம் பொருந்தாது. எந்த நிறுவனம் எந்தத் தொழிற்சாலை விரும்புகிறதோ அந்த தொழிற்சாலையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே பொருந்தும். இது தொழிலாளர்களுக்கு விரோதமான சட்ட திருத்தம் அல்ல. எந்த ஒரு தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாகவோ எதிர்பாவோ கொண்டுவரக்கூடிய சட்ட திருத்தம் அல்ல.


தொடர்ந்து வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை செய்யக்கூடிய காலம் நீடிக்கும். அவர்களுக்கான பலன்களில் எந்த மாற்றமும் இல்லை. அரசாங்கம் பரிசீலனை செய்து தான் இதை நிறைவேற்றுமே தவிர எல்லா நிறுவனங்களிலும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. எந்த ஒரு தொழிலாளர்களின் எதிர்ப்பை மீறியும் கட்டாயப்படுத்தியோ நிச்சயமாக இது நடைமுறைப்படுத்த மாட்டோம். விரும்புகின்ற தொழிற்சாலையில் மட்டும் தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படும் என கூறினார்.


தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்தம் உலகளாவிய சூழ்நிலையில் புதிய முதலீடுகள் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் வருகின்ற போது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் நிறுவனங்கள் வேலை நேரங்களில் குறிப்பிட்ட flexibility இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் .


இந்த flexibility மூலமாக புதிய வேலை வாய்ப்புகள் குறிப்பாக பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. எல்லா நிறுவனங்களுக்கும் இது பொருத்தமானது அல்ல. குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தக்கூடிய வாய்ப்புகளாக உள்ளது.


உதாரணத்துக்கு மின்னணுவியல் துறையில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் அதே போல் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள், சாப்ட்வேர் நிறுவனங்கள் அவர்கள் வேலை பார்க்கக் கூடிய சூழலுக்கு ஏற்ற வகையில் அங்கே வேலை பார்ப்பவர்கள் அவர்களாக விரும்பினால் தாமாக முன்வந்து இதை ஒரு ஆப்ஷனாக எடுத்துக் கொள்ளலாம்.


இதனால் வாரத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த வேலை மணி நேரங்கள் மாறாது. நான்கு நாட்கள் வேலை செய்து மூன்று நாட்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். வேறு பணிகளை அவர்கள் பார்க்கலாம். மாறுபட்டு இருக்கக்கூடிய வேலை நிலைகளில் இந்த flexibility அவசியமான ஒன்றாக இருக்கிறது. எந்த துறைக்கு இது பொருந்தும் என்று வகுக்கப்பட்டு பணியாற்ற கூடியவர்கள் யார் விரும்புகிறார்களோ? அவர்களாக தன்னார்வமாக அதனை ஏற்றுக் கொண்டால் அதற்கான உரிமை உள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad