மாணவர்கள் நேர்மையை வளர்க்க, ஆளில்லாத கடை அமைத்து அரசு பள்ளி அசத்தல் - Asiriyar.Net

Saturday, April 29, 2023

மாணவர்கள் நேர்மையை வளர்க்க, ஆளில்லாத கடை அமைத்து அரசு பள்ளி அசத்தல்

 



தஞ்சை அருகே அன்னப்பன்பேட்டையில் வண்ண சீருடை அணிந்து அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வருவது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பள்ளியில் மாணவர்களிடம் நேர்மையை வளர்க்க ஆளில்லாத கடை அமைத்து அசத்தி உள்ளனர்.


நினைப்பை பொய்யாக்கும் அரசு பள்ளி


அரசு பள்ளி என்றாலே ஏழை மாணவர்கள், மரத்தடியில் வகுப்பறை, அடிப்படை வசதி கேள்விக்குறியான நிலை என பெரும்பாலனவர்கள் நினைத்து வருகின்றனர். அதனை பொய்யாக்கும் வகையில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 192 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


வண்ணசீருடை


அரசு பள்ளி என்றால் வறுமையின் அடையாளம் அல்ல, அது பெருமையின் அடையாளம் என உணர்த்த இப்பள்ளி மேலாண்மை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பள்ளியின் கல்விதரம், அடிப்படை கட்டமைப்பை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


சீருடை குறித்து மாணவர்களின் மன ஏக்கத்தை புரிந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வண்ண சீருடைகளை வழங்க முடிவு செய்தனர். மாணவர்களிடம் சிறிய தொகையை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வண்ண சீருடை வழங்கினர். அதன்படி மாணவர்களுக்கு பச்சை, கருநீலமும், பெண்களுக்கு மஞ்சள், கருநீல சீருடைகள் வழங்கப்பட்டது


வியப்பு


இந்த சீருடைகளை மாணவர்கள் வாரத்தில் செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் பள்ளிக்கு அணிந்து வருகின்றனர். அப்படி வருகையில் அந்த பகுதியில் உள்ள மக்கள், வாகனங்களில் செல்பவர்கள் அரசு பள்ளி மாணவர்களான இவர்கள் என வியந்து பார்த்து செல்கின்றனர்.


வண்ண சீருடையில் ஜொலிக்கும் மாணவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் வகுப்பறையில் பாடம் படிக்கிறார்கள். மேலும், பள்ளியில் அனைத்துதிறன்களையும் வெளிப்படுத்தும் வகையில் புதிதாக கலையரங்கம், அரசின் நம் பள்ளி நம் பவுண்டேசன் மூலம் நிதி உதவி பெற்று பல வசதிகளையும் பள்ளிக்கு செய்து வருகின்றனர்.


வகுப்பறையில் ஆளில்லாத கடை



அதுமட்டுமின்றி பள்ளி வகுப்பறையில் ஆளில்லாத கடை அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த கடையில் தேவையான தின்பண்டங்களை பாட்டிலில் வாங்கி வைப்பர். அதில் அதற்கான விலையும் ஒட்டப்பட்டிருக்கும். அதன் அருகே ஒரு உண்டியல் வைக்கப்பட்டிருக்கும்.


தின்பண்டம் தேவைப்படும் மாணவர்கள் அதற்கான காசை உண்டியலில் போட்டு விட்டு தின்பண்டத்தை எடுத்து செல்லலாம். இதன்மூலம் மாணவர்களுக்கு நேர்மை, ஒழுக்கம் உள்ளிட்டவை தானாகவே உருவாகவும் சூழல் ஏற்படுகிறது. அரசு பள்ளியின் இந்த செயல்பாடுகள் அந்த பகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது


ஏக்கம் தீர்ந்தது


இதுகுறித்து பள்ளி மாணவன் ஹரிஸ் கூறுகையில்:- நான் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். எனது நண்பர்கள் சிலர் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்கள் வண்ண சீருடையில் செல்வதை பார்க்கும் போது பல நாட்கள் அது போன்ற உடை அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என ஏக்கத்துடன் இருந்துள்ளேன். தற்போது எனது பள்ளியிலேயே வண்ண சீருடைகள் அணிந்து வகுப்புகளுக்கு செல்வது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. எனது ஏக்கமும் தற்போது தீர்ந்தது என மகிழ்ச்சியுடன் கூறினார்.


புத்துணர்வு கிடைக்கிறது


இதுகுறித்து பள்ளி மாணவி கனிமொழி கூறும்போது:- வண்ண சீருடையுடன் பள்ளிக்கு வரும் போது எனக்கு புத்துணர்வு தானாக உருவாகிறது. அதுவும் பள்ளியில் கொடுக்கப்பட்டுள்ள உடை சுடிதார் அமைப்பு கொண்டது. இதனால் எந்தவொரு சிரமும் இன்றி விைளயாடவும், படிக்கவும் முடிகிறது. 6-ம் வகுப்பு படித்து எனக்கு வண்ண சீருடை அணிந்து பள்ளிக்கு வருவது மிகவும் பிடித்து உள்ளது என தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad