மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து பணி செய்யும் வசதி: விரைவில் அறிமுகம் செய்கிறது தமிழக அரசு - Asiriyar.Net

Sunday, December 4, 2022

மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து பணி செய்யும் வசதி: விரைவில் அறிமுகம் செய்கிறது தமிழக அரசு

 மாற்றுத்திறனாளிகள் இல்லத்திலிருந்தே பணி செய்யலாம் என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (நவ.3) உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில், " இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடுகிற நாளாக நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். நம்மைப் பொறுத்தவரையில் அனைத்து நாட்களிலுமே அவர்களுக்கு நன்மை செய்து வருகிறோம். அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு ஒரு சிரமம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கக்கூடிய அரசாக நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


கடந்த வாரத்தில் கோட்டையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் வாரியத்தினுடைய ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியதை நீங்களெல்லாம் அறிந்திருப்பீர்கள், மறந்திருக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். “ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடையக் கூடாது. ஒரே ஒருவருக்கு என்றாலும் நன்மை பயக்கும் என்று சொன்னால், அந்தச் செயலை நாம் உடனடியாக செய்தாக வேண்டும். இத்தகைய கருணை உள்ளத்தோடு இவர்களது நலம் காக்கப்பட வேண்டும், அதற்கு நாம் துணையாக நிற்போம்" - என்று நான் குறிப்பிட்டேன். அந்த அடிப்படையில்தான் தொடர்ந்து நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.


“ஊனமுற்றோர் என்று சொல்லக் கூடாது; அவர்கள் மாற்றுத்திறனாளிகள்!” என்ற புதிய பெயரைக் கொடுத்து புதிய நம்பிக்கையை உருவாக்கியவர்தான் நம்முடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறையை உருவாக்கினார். உருவாக்கியது மட்டுமல்ல, அந்தத் துறையை தன் பொறுப்பிலே வைத்துக் கொண்டார்.


அவர் வழியிலே இன்று நானும் அந்தத் துறையை என் பொறுப்பிலே வைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இதன் மூலமாக இம்மக்கள் மீது நாங்கள் வைத்திருக்கக்கூடிய உண்மையான அக்கறையை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.


பிறவியில் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும் - பின்னர் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும் - விபத்தின் காரணமாக ஏற்பட்ட நிலையில் இருந்தாலும் - பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்களை சிறப்புக் கவனம் செலுத்திக் கவனிக்க வேண்டும். அவர்களது உடல் குறைபாடானது, ஆனால் உள்ளக் குறைபாடு அல்ல, அறிவுக்குறைபாடு அல்ல, திறன் குறைபாடு அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து அவர்களை நாம் மதித்தாக வேண்டும்.


வினைத்திட்பம் என்பது ஒருவரது மனத்திட்பமே என்கிறார் அய்யன் வள்ளுவர். அத்தகைய மனத்திட்பம் கொண்டவர்களாக மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கே வருகிற பாதையில் இந்த அரங்கத்திற்கு வருவதற்கு முன்பு 'ஊதா அங்காடி' கண்காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்களெல்லாம் பார்த்திருப்பீர்கள், நானும் பார்த்துவிட்டுத் தான் வருகிறேன். மாற்றுத்திறனாளிகளின் திறமையால் உருவாகியிருக்கக்கூடிய பொருள்களை அங்கு விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.


அவர்களை அவர்களது பெற்றோரும், உற்றாரும், உறவினரும், நண்பர்களும், இந்த சமூகமும், அரசும் உரிய மரியாதையுடன் நடத்திட வேண்டும். அதற்கான உறுதியை நாம் அனைவரும் எடுத்துக்கொண்டாக வேண்டும். சமூகத்தின் மற்ற தரப்பினர் அடையக்கூடிய அனைத்து வசதி, வாய்ப்புகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற்றிட வேண்டும்.


சென்னை மெரீனா கடற்கரையில் கால்நனைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்து கொடுத்த ஏற்பாட்டை அனைவரும் அறிவீர்கள். நமது ஈரமான மனதின் காரணமாக மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளின் உரிமை எனக் கருதி நாம் உருவாக்கிய பாதை தான் அந்த அன்புப் பாதை. அதில் சென்று கடலில் கால் வைத்தபோது, மாற்றுத்திறனாளிகளின் மனம் மகிழ்ச்சியால் திளைத்ததைப் பார்த்து நானும் திளைத்தேன்.


அது மிகப்பெரிய செலவு பிடிக்கக்கூடிய திட்டம் அல்ல. ஆனால் அதனால் விளையும் பயன் என்பது எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் கிடைக்க முடியாத மகிழ்ச்சி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. பிறந்ததில் இருந்து இதுவரை கடலில் கால் நனைத்திடாத ரஞ்சித்குமார், அலைகடலில் கால் நனைத்து மகிழ்ந்த காட்சியை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஒவ்வொரு தனிமனிதருக்கும் நன்மை அளிக்கும் அரசாகச் செயல்படுவோம் என்று ஆட்சி அமைந்த நேரத்தில் நான் எடுத்துச் சொன்னேன். அதற்கு இவைகளெல்லாம் சாட்சிகளாக அமைந்திருக்கிறது.


மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னிச்சையான செயல்பாட்டிற்காக உடல் குறைகள் நீங்கி, ஊக்கத்துடன் செயல்பட ஏதுவாக புதுமையான உதவி உபகரணங்கள் மற்றும் கருவிகளையும் நமது மாநிலம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்தும் கொண்டுவந்து காட்சிக்கு இங்கே கண்காட்சியிலே வைக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்திற்கு உதவக்கூடிய பொருட்களை உற்பத்திசெய்து அவையும் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது, அதையும் பார்வையிட்டேன்.


தடையற்ற சூழல் அமைப்பது பொது இடங்கள் மற்றும் கட்டடங்கள் மட்டுமல்ல, முதலில் அமைக்கவேண்டியது நமது இல்லத்திலேயே என்பதை உணர்த்தக்கூடிய வகையிலே, மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்க இல்லத்தின் (Accessible Home) நீங்கள் மாதிரிகளையும், காட்சிகளையும் வைத்திருக்கிறீர்கள்.


மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருக்கிறது, நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்களின் ஆற்றல் வெளிக் கொணரப்பட்டு, சமுதாயத்தில் தடையற்ற சூழலும் அமைக்கப் பெற்றால், அவர்கள் அனைத்து உயரங்களையும் அடைவார்கள் என்பதில் ஐயம் இல்லை.


தடைகளை வென்று சாதனை படைத்தவர்கள் பலர் இன்றைய நாளில் நம் தமிழ்நாட்டிலேயே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால்,


தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் மாரியப்பன் தனது குறைகளை இளம்வயதிலிருந்தே எதிர்கொண்டு தடைகளை வெற்றிதடங்களாக மாற்றி, இப்போது நம் நாட்டிற்கே ஒரு பெருமையை தேடி தந்து கொண்டிருக்கிறார். அண்மையில் அர்ஜுனா விருது பெற்ற மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகா, பேட்மிண்டன் போட்டியில் பல உலக சாதனைகளைப் படைத்து வருகிறார்.


நாட்டின் உயரிய தேசிய விருதுகளைப்பெற்ற அமர்சேவா சங்கத்தின் நிறுவனர் ராமகிருஷ்ணன் மற்றும் சங்கர ராமன் போன்றோர் மிகவும் கடுமையான உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும், மனம் தளராமல் தங்களையும் பராமரித்துக் கொண்டு சமுதாயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தொடர்ந்து சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.


தமிழக அரசினுடைய நிர்வாகத்தின் அலுவலர்களாக எத்தனையோ பேர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். தமிழின் முன்னணி எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்களாகச் செயல்படுகிறார்கள். முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்குள் முடங்கிவிடக்கூடிய காலம் இருந்தது. ஆனால் இப்போது அதைத் தாண்டி, பொதுவெளியில் போராடி முன்னுக்கு வரத் தொடங்கி விட்டார்கள்.


ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி அந்த நாட்டினுடைய மனித வளத்தைப் பொறுத்தே அமையும். சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையும் இவ்வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகிக்கிறது. எனவேதான், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிந்து வேலை வாய்ப்புகளை வழங்க, வல்லுநர் குழு (Expert Committee) மற்றும் உயர்மட்டக் குழுக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் சிறப்பாகவும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுத்திறனாளிகள் பணிக்கூடங்களில் பிறரை சாராமல் வேலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கும்.


மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குச் சென்று பணி செய்ய வேண்டிய தேவை இல்லை; இல்லத்திலிருந்தே பணி செய்யலாம் என்ற ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்கப் போகிறோம். அதற்குச் சான்றாகத்தான் “நான் முதல்வன்” திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி, மென்பொருளுடன் கூடிய திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய புதிய முயற்சியும் இங்கே அரங்கேற்றப்பட்டு உள்ளது.


இந்த நாளில், மாற்றுத்திறனாளிகளின் சேவையை ஊக்கப்படுத்தும் நல்ல உள்ளங்களை ஊக்கப்படுத்தும் வகையில் விருதுகளை வழங்கி அவர்களையும் பாராட்டுகிறோம்.ஆடுகளை மேய்ப்பவர், ஒரே ஒரு ஆட்டை தனது தோளில் தூக்கி சுமந்து வருகிறார் என்றால், அந்த ஆடு நடக்க முடியாத நிலையில் இருக்கும். இதுதான் சமூகநீதி என்று எளிமையான விளக்கத்தை சொன்னவர் யார் தெரியுமா? நம்முடைய தலைவர் கருணாநிதி.


அத்தகைய சமூகநீதிச் சிந்தனையின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் இந்த அரசானது, எப்போதும் எந்தச் சூழலிலும் அனைத்து மக்களின் அரசாக இருக்கும்! அதிலும் குறிப்பாக, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களின் அரசாக இருக்கும்! அவர்களுக்காகவே திட்டமிடும் அரசாக இருக்கும்! அவர்களில் ஒருவராக இருந்து அவர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அரசாகவே இருக்கும்! என்று கூறி, உலக மாற்றுத்திறனாளிகள் நாளில், உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்." இவ்வாறு முதல்வர் பேசினார்Post Top Ad