தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 10ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்களாக இருந்த நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. புதிதாக தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உதயமாகின. இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த மாவட்டங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, iஇந்த மாவட்டங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு கடந்த மாதம் 31-ம் தேதி வாக்காளர் பட்டியலும் வெளியானது. இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 10ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment