1-8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு? - Asiriyar.Net

Monday, September 13, 2021

1-8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு?

 




பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வரை படிக்கும் மாணவர்களுக்கு, வகுப்புகளை துவங்குவது தொடர்பாக, பள்ளி கல்வித் துறையில் ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.


பள்ளிகள் திறக்கப்பட்டு, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், செப்., 1 முதல் நேரடியாக வகுப்புகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. சில மாவட்டங்களில் மாணவ - மாணவியர் மற்றும்ஆசிரியர்கள் சிலர், கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனாலும், அச்சப்படும் அளவுக்கு தொற்று பரவல் இல்லாததால், பள்ளி கல்வி அதிகாரிகளும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.


அதேநேரத்தில், சிறு பிள்ளைகளை, பள்ளிகளுக்கு வரவழைக்காமல், மாதக்கணக்கில் வீட்டிலேயே வைத்திருப்பதால், அவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என்று கல்வியாளர்கள் மற்றும் உளவியலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், ஒன்று முதல் ௮ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகளை துவங்கலாம் என பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


இதற்காக மாவட்ட வாரியாக, கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் கருத்துக்களை அரசு பெற்றுள்ளது.இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நாளை சென்னையில் நடக்கிறது. இதில், பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதற்கிடையில், பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் தலைமையிலான அதிகாரிகள், பள்ளி திறப்பு தொடர்பாக அறிக்கை தயாரித்துள்ளனர். அது, 15ம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.




Post Top Ad