தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பெண் பிள்ளைகளின் நலனை காக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலருக்கான சுற்றறிக்கை!
கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடபட்ட நிலையில் தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது. 9-12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. விரைவில் 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் ஏற்படுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன.
பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் சார்ந்த குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் கல்வித்துறை தற்போது இறங்கியுள்ளது. அதன்படி தற்போது ஒவ்வொரு பள்ளிகளிலும் பெண் குழந்தைகளின் நலனை காக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில் சமூக நல அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பெண் காவல்துறை அலுவலர், பெண் மனநல மருத்துவர் ஆகியோர் இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தவறு இழைத்த ஒரு சில ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையல் அடைக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வருவதற்கு முன்னரே அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.