1 முதல் 8ம் வகுப்புக்கு நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, September 29, 2021

1 முதல் 8ம் வகுப்புக்கு நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு





தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்.31-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.552, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 11.09.2021-ன்படி, 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று (28-9-2021) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  


இதன் அடிப்படையில், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கொரோனா நோய்த் தொற்று பரவக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும்,  அரசு ஆணை எண்.552, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 11.09.2021ன்படி, விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 31.10.2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும். சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.


நோய்த்தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.


பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்த அனுமதி

பொதுமக்கள், தங்களது குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருகை புரிந்து தலைமைச் செயலகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து வருகின்றனர், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்குடன், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், திங்கட்கிழமை தோறும், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் ஆகியவற்றை கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.


1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கான நேரடி வகுப்புகள் 1-11-2021 முதல் நடத்த அனுமதி மேலும், மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிருக்காக பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.  அதே போல், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள்,


கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1-ஆம் வகுப்பு முதல்  8-ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01-11-2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்.


பொது:-

* மாவட்ட ஆட்சியர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.


* கடைகளிலும், பொது மக்கள் கூடக்கூடிய இடங்களிலும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.


* கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).   


* கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.


* அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.  


* கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.


நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

• நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.


• கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட  ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், கீழ்க்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.


• நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர,  இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.


• நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.


• கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறும், கூட்டம் கூடக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், உரிய  கட்டுப்பாடுகளால் மட்டுமே கொரோனா 3வது அலையை தவிர்க்க இயலும் என்பதை உணர்ந்து அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.


Post Top Ad