தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்துஅறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடும்போது, ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பையும் வெளியிடுவார் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையத்தில் நடந்த, ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தின் தொடக்கவிழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, திட்டத்தை தொடங்கி வைத்தார். அதில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான நவீன அறிவியல், விஞ்ஞானம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் அறிவியல் தொடர்பாக இதுவரை 3,000 பேருக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த ஆண்டும் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அறிவியல் பயிற்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தை,மாவட்டந்தோறும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்வித்துறையின் மூலம் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சியிலும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தை பயன்படுத்தி, மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்புகள் வெளியாகும்போதும், பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பும், அதில் இடம் பெறுகிறது.
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கருத்துகளை கேட்டறிந்து அதன் அறிக்கையை முதல்வரிடம் கொடுத்துள்ளோம். எனவே மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளின் பேரில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார். ஏற்கெனவே, 9 முதல் பிளஸ் 2 மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. மாணவர்கள் கட்டாயமாக பள்ளிக்கு வரவேண்டிய அவசியமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.