கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 11, 2021

கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 






தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 814 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு, 2019 ஜூன் மாதம் நடந்த ஆன்லைன் தேர்வில், 175 மையங்களில் முறைகேடுகள் நடந்தது. எனவே, இப்பணிக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 


இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பார்த்திபன், 3 தேர்வு மையங்கள் தவிர மீதமுள்ள  தேர்வு மையங்களில் தேர்வு எழுதி தேர்வாகிய விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமனம் வழங்கும்  நடைமுறைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.



அதேசமயம்,  3 தேர்வு மையங்களில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்து நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டார். இந்நிலையில், அனைத்து தேர்வு மையங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 


அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தனி நீதிபதி உத்தரவின்படி, 742 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி, தனது விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையைப்பார்த்த பின் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனக் கோரினார்.



இதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக அனைத்து மையங்களுக்கும் சேர்த்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உதவியாக, அரசியல் சார்பில்லாத ஓய்வுபெற்ற டிஐஜி அதிகாரியை இணைத்து கொண்டு விசாரணை நடத்தி ஏப்ரல் 30ம் தேதிக்குள் தனி நீதிபதி முன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 



விசாரணையின் போது, அனைத்து தேர்வு மையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறலாம். பதிவுகள் இல்லாத பட்சத்தில் தேர்வு எழுதியவர்களை அழைத்து விசாரிக்கலாம். ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் நியமனம், தனி நீதிபதியின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டு  வழக்கை முடித்து வைத்தனர்.

Post Top Ad