தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வினாத்தாள் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக, 2020 மார்ச், 10 முதல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. 10 மாதங்களுக்கு பின், மீண்டும் பள்ளி, கல்லுாரிகளை படிப்படியாக திறக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.பொது தேர்வு நடத்தப்பட வேண்டிய, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள், ஜன., 19ல் துவங்கின. அதையடுத்து, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகள், வரும், 8ம் தேதி முதல் துவங்க உள்ளன.
இந்நிலையில், பொது தேர்வுக்கான கால அட்டவணை தயாரிப்பு முடிந்துள்ளது. ஜூனில் பொது தேர்வை நடத்துவதற்கு, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதற்கான கோப்பு, முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில், தேர்வு தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பொது தேர்வுக்கான பணிகளை, பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள, அரசு தேர்வுத்துறை துவங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வழியாக, வினாத்தாள் உருவாக்கப்படுகின்றன.பாடங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள், இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரங்கள், வினாத்தாள் தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்டு உள்ளன. அதன் அடிப்படையில், வினாக்கள் உருவாக்க, ஆலோசனை கூறப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக, வினாக்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் இருந்து, இறுதி வினாத்தாள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, ரகசியமாக வைக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.