ஆசிரியர் காலி பணியிடங்கள் - தமிழக அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன? - Asiriyar.Net

Friday, May 2, 2025

ஆசிரியர் காலி பணியிடங்கள் - தமிழக அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?

 



ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காமல் தவிக்கும் இடைநிலை ஆசிரியர்கள், திருச்சி பிரஸ் கிளப்பில் கண்ணீர் மல்க பேட்டியளித்தனர். 12 ஆண்டுகளாக 15,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்தும், 2768 இடங்கள் மட்டுமே நிரப்ப அறிவிப்பு வந்ததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.


இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கு பணி ஆணை வழங்கக் கோரி கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர். கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 21, 2024 அன்று 2768 காலி பணியிடங்களை மட்டுமே அறிவித்தது. ஆனால், உண்மையில் 15,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. எனவே, கூடுதல் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரஸ் கிளப்பில், இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: "கடந்த 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து போராடி வருகிறோம்.


2013 முதல் இன்று வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் 15,000-க்கும் மேல் உள்ளன. ஆனால், அரசு 2768 பணியிடங்களை மட்டுமே அறிவித்துள்ளது. எனவே, நியமன பணியிடங்களை அதிகரித்து முழுமையாக நிரப்ப வேண்டும்.


இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், " இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றும், தமிழ்நாடு அரசு இதுவரை பணி ஆணை வழங்கவில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை சந்தித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.


மேலும், "தமிழ்நாட்டில் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். அப்போதும் தமிழ்நாடு அரசு எங்களை கண்டு கொள்ளவில்லை" என்று வேதனையுடன் தெரிவித்தனர். ஆசிரியராக வேண்டுமென்ற கனவோடு தேர்வு எழுதி, தற்போது பணிகள் கிடைக்காமல் மன அழுத்தத்தில் இருப்பதாக அவர்கள் கூறினர்.


தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பான முறையில் தொழில்நுட்பங்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால், காலி பணியிடங்களை நிரப்புவதில் ஏன் தாமதம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். 12 ஆண்டுகளாக போராடி வரும் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.


No comments:

Post a Comment

Post Top Ad