பிளஸ் டூ முடித்த மாணவர்கள், இளநிலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட் ஊட்டி அரசு கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுகிறது.
உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும், 10ல் ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கும் பிரிவாகவும் திகழ்கிறது சுற்றுலாத் துறை. இந்தத் துறைத் தொடர்பான சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பட்டப் படிப்புக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகமாகி வருகிறது. மேலாண்மை சார்ந்த கல்வி, உலகச் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம், படிக்கும் போதே சுற்றுலா சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி, படித்து முடித்த உடன் வேலை எனப் பல சிறப்புகளைக் கொண்டு இருக்கும் சுற்றுலா படிப்புகள் உலக அளவில் அநேக மாணவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் படிப்பாக உள்ளது.
சுற்றுலா சார்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவிச் சிறப்பாகச் செயல்பட்டு, வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து வருகின்றன. ஆனாலும், தமிழகத்தில் சுற்றுலா படிப்பைப் பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் அவ்வளவாக இல்லை என்பதே நிதர்சனம்.
பிளஸ் டூ முடித்த மாணவர்கள், இளநிலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பி.ஏ.டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட், பி.பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட், பி.காம். டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட் எனப் பல பெயர்களில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரி உட்படப் பல அரசு, தனியார் கல்லூரிகளில் பி.ஏ.டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட் என்ற மூன்று ஆண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது.
ஊட்டி அரசு கல்லூரி சுற்றுலாத் துறை பேராசிரியர்கள் கூறியது: பிளஸ் டூ வகுப்பில் எந்த பிரிவில் படித்த மாணவர்களும் இந்தத் துறையைத் தேர்தெடுத்துப் படிக்கலாம்.
தகவல் தொடர்புத் திறன், ஆளுமை மேம்பாடு, பயண நிறுவனம் மேலாண்மை, உலகச் சுற்றுலாத் தலங்களைப் பற்றிய அறிவு , சுற்றுலா தொகுப்பு வடிவமைப்பு, சந்தைப் படுத்தல் மேலாண்மை, சுற்றுலா பொருளாதாரம், விருந்தோம்பல் மேலாண்மை, நிகழ்வு மேலாண்மை, விமான மற்றும் விமான நிலைய மேலாண்மை ஆகியவை சுற்றுலா பாடத் திட்டத்தில் உள்ள மிக முக்கியமான பாடங்கள். இந்தப் பாடப் பிரிவில் கற்றுத் தேர்ந்து சிறந்த அறிவும் ஆங்கில மொழிப் புலமையும் பேச்சுத் திறனும் வளர்த்துக்கொண்டால் சுற்றுலாத் துறையில் பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்.
ஏதாவது ஓர் இளைநிலை பட்டம் பெற்ற பிறகும் கூட, முதுநிலை பட்டமாக சுற்றுலா படிப்புகளைப் படிக்கலாம். MTTM (Master of Tourism & Travel Management), MBA (Tourism), MA (Tourism) எனப் பல பெயர்களில் பல்கலைக் கழகம் சார்ந்து முதுநிலையில் சுற்றுலா படிப்புகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியச் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை கல்வி நிறுவனம் (IITTM) குவாலியர், நொய்டா, புவனேஸ்வர், கோவா, நெல்லூர் ஆகிய இடங்களில் சுற்றுலா சார்ந்த உயர் கல்வியை வழங்குகிறது.
புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுடெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம், பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், HNB கர்வால் பல்கலைக் கழகம், ஜம்மு மத்தியப் பல்கலைக்கழகம், ஹிமாச்சல் மத்தியப் பல்கலைக் கழகம் ஆகிய மத்தியப் பல்கலைக் கழகங்களில் சுற்றுலா சார்ந்த முதுநிலை பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், கோவை அரசு கலைக் கல்லூரியிலும் சுற்றுலா சார்ந்த முதுநிலை பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன. புத்தகப் படிப்பைத் தாண்டி செயல் வழி கல்விக்காகச் சுற்றுலா சார்ந்த பாடத் திட்டத்தில் இரண்டு மாத நிறுவனப் பணிப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் படிக்கும்போதே பணிக்குத் தயாராகிவிடுவார்கள்.
சுற்றுலாத் துறையில் உள்ள ஏராளமான வேலை வாய்ப்புகளுக்கு, அபரிமிதமான மனித வளம் தேவைப் படுகிறது. முதுநிலை சுற்றுலா பயின்ற மாணவர்கள், இந்தத் துறையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களால் மேலாண்மைப் பயிற்சியாளராகப் பணியமர்த்தப்படுகிறார்கள்.
பயண முகவர், சுற்றுலா ஒருங்கிணைப்பு நிறுவனங்கள், ஆன்லைன் பயண நிறுவனங்கள், நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள், விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல், போக்குவரத்து மற்றும் சரக்கு நிறுவனங்கள் எனப் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment