தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி கொடுக்காததற்கான காரணம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய விளக்கம் அளித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை. மாணவர் சேர்க்கையை விரைவில் தொடங்க உத்தரவிட வேண்டும்," எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஆர். சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (மே 22) விசாரணைக்கு வந்தது.
அப்போது, "கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும்,"என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று (மே 23) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன், தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கைக்கான மத்திய அரசின் பங்கு தொகை ஒதுக்கப்படவில்லை.
நாடு முழுவதும் பல மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை,"எனக் குறிப்பிட்டார்.
அபோது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசின் பெரியண்ணன் (Big brother) மனப்பான்மையை காட்டுகிறது,"என கூறினார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதிகள், "25 சதவிகித இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை தொடங்குவது குறித்து வரும் 28ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,"என்றும் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment