'மாற்றுத்திறனாளிகள் சொந்த ஊருக்கு அருகே பணியிட மாறுதல் பெறலாம் என்ற அரசாணையை, பெரும்பான்மையான அதிகாரிகள் பின்பற்றுவதில்லை' என, மாற்றுத்திறனாளிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அரசு துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலின் போது, அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து, இதுவரை மூன்று அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன்படி, அரசு துறையில், 'குரூப் ஏ, பி, சி, டி' உள்ளிட்ட துறைகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி பணியாளர்களும், குடும்பத்தில் யாரேனும் ஒருவர் உடல் ஊனமுற்றவராக இருக்கும் பட்சத்தில், அந்த ஊழியரும், சொந்த ஊருக்கு அருகில் பணியிட மாறுதல் பெறலாம்.
ஆனால், மாற்றுத்திறனாளிகள் பணியிட மாறுதலுக்கான அரசாணையை, பெரும்பாலும் அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்றும், பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்து ஓராண்டாகியும், அதிகாரிகள் அனுமதி வழங்காமல் உள்ளனர் என்றும், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அச்சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தற்போது தமிழகம் முழுதும், 20,000க்கும் மேற்பட்ட, மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் உள்ளோம். இவர்களில், 40 சதவீதம் பேர், வெளி மாவட்டங்களில் பணியில் உள்ளனர். இவர்களது பிரதான கோரிக்கை, சொந்த மாவட்டத்திற்கு பணி மாறுதல் வேண்டும் என்பது தான்.
பொதுவாக, அரசு பணியாளர்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பணியிட மாறுதல் பெறுவது வழக்கம். ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த நடைமுறை கிடையாது.
மாற்றுத்திறனாளிகள் பணியிட மாறுதல் குறித்து, 1994, 2009 மற்றும் 2020ம் ஆண்டுகளில் வெளியான அரசாணைகள் தெளிவாக கூறுகின்றன.
ஆனால், இதை அதிகாரிகள் பின்பற்றாமல், விண்ணப்பத்தை நிலுவையில் வைத்து விடுகின்றனர். எங்களது சங்க உறுப்பினர் சுரேஷ் என்பவர், பணியிட மாறுதல் கோரி, கடந்தாண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்தார்; தற்போது வரை மாறுதல் பெறவில்லை.
சேலம் மாவட்டம், எடப்பாடியில் காலிப்பணியிடம் இருந்தும், அதிகாரிகள் விண்ணப்பதை நிலுவையில் வைத்துள்ளனர்.
இது குறித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், உரிய பதில் வருவதில்லை. எனவே, மனிதவள மேலாண்மை துறை தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment