Cut - Off Marks - கணக்கிடுவது எப்படி? - Asiriyar.Net

Wednesday, May 28, 2025

Cut - Off Marks - கணக்கிடுவது எப்படி?

 




மாணவர்கள் அதிகமும் சேரும் பொறியியல் படிப்புக்கு பிளஸ் டூ தேர்வில் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு, இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளிலும் சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.


இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதுதான் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும். இதன் அடிப்படையில்தான் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.


தொழிற் பயிற்சிப் பாடப்பிரிவு (Vocational) மாணவர்களுக்கு, தொடர்புடைய பாடத்திற்கு நூறு மதிப்பெண்களும் தொழிற் பயிற்சிப் பாடத்திற்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வைச் சேர்த்து 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதன் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தனியே கவுன்சலிங் நடைபெறும்.


பி.ஆர்க். படிப்பி்ல் சேர்வதற்கு நேட்டா (National Aptitude Test In Architecture- NATA) நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன் பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200க்கு எவ்வளவு எடுத்துள்ளர்கள் என்பதும் கணக்கிடப்பட்டு பி.ஆர்க். தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுத் தனியே கவுன்சலிங் நடைபெறும்.


கால்நடை மருத்துவப் படிப்புகள்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் கால்நடை மருத்துவப் படிப்பில் (BVSc) சேர விரும்புபவர்கள் உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) படிப்பில் 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் சேர்த்து 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் பார்க்க வேண்டும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பதை வைத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.


தொழிற் பயிற்சி பாடப்பிரிவு மாணவர் களைப் பொறுத்தவரை உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) படிப்பில் 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் தொழிற் பயிற்சிப் பாடப்பிரிவுகளில் 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் பார்க்க வேண்டும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பதை வைத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.


கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் ஃபுட் டெக்னாலஜி, பவுல்ட்ரி டெக்னாலஜி, டெய்ரி டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் பிடெக் படிப்பில் சேர விரும்பு வோர் உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய நான்கு பாடப்பிரிவு களிலும் தலா 50 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்த்து, 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பது கணக்கிடப்பட்டுத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.


மீன்வளப் படிப்புகள்: தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கு அந்தந்தப் பாடப்பிரிவுகளுக்கு உரிய நான்கு முக்கியப் பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலும் தலா 50 மதிப்பெண்கள் வீதம் கணக்கிடப்பட்டு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது கணக்கிடப் பட்டு (Aggregate Mark Calculation) தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.


BFSc படிப்பில் சேர விரும்பும் தொழிற்பயிற்சிப் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் இதே போல 200 மதிப் பெண்களுக்குக் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது கணக்கிடப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். B.Voc. பட்டப்படிப்பில் பிளஸ் டூ மாணவர்கள் மட்டுமல்ல பட்டதாரி மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள். ஆனால், பிளஸ் டூ தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இப்படிப்புகளில் சேர்க்கப்படுவார்கள்.


அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ. தமிழ் இலக்கியம், பி.லிட். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் பெற்ற தமிழ் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். பிளஸ் டூ தேர்வில் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தயாரிக்கப் படும் தரவரிசைப் பட்டியல் மூலம் பி.ஏ. ஆங்கிலப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.


பிளஸ் டூ தேர்வில் மொழிப்பாடங்கள் நீங்கலாக மீதமுள்ள 4 பாடங்களின் மதிப்பெண்களின் (400 மதிப்பெண்கள்) அடிப்படையில் தயாரிக்கப்படும் பொதுத் தரவரிசைப் பட்டியல் மூலம் பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்டபிள்யூ ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.


வேளாண் படிப்புகள்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வேளாண் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கு அந்தந்தப் பாடப்பிரிவுகளுக்கு உரிய நான்கு முக்கியப் பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலும் தலா 50 மதிப்பெண்கள் வீதம் கணக்கிடப்பட்டு, மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது கணக்கிடப்பட்டு வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். எடுத்துக்காட்டாக, பிஎஸ்சி அக்ரி (ஆனர்ஸ்) படிப்பில் சேர கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பாடங்கள் கருத்தில் கொள்ளப்படும். இதேபோல மற்ற பாடங்களுக்கும் கணக்கிடப்படும்.


சட்டப் படிப்புகள்: நேஷனல் லா ஸ்கூல் என்று அழைக்கப்படும் தேசியச் சட்டப் பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு இளநிலை சட்டப் படிப்புகளில் சேர்வதற்கு கிளாட் (Common Law Admission Test - CLAT) என்கிற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். அதன் அடிப்படையில் நேஷனல் லா ஸ்கூல்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.


தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு இல்லை. பிளஸ் டூ தேர்வில் மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடங்களில் எடுத்த ஒட்டுமொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுச் சட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad