"மகப்பேறு விடுப்பு அரசியலமைப்பு சட்டம் அளித்த உத்தரவாதம்" - ஆசிரியை வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Asiriyar.Net

Monday, May 26, 2025

"மகப்பேறு விடுப்பு அரசியலமைப்பு சட்டம் அளித்த உத்தரவாதம்" - ஆசிரியை வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 



மகப்பேறு விடுப்பு என்பது மகப்பேறு சலுகைகளில் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும் இது பெண்களுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்த உத்தரவாதம் என்றும் தமிழ்நாடு பெண் அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியை ஒருவர் அரசு பணியில் சேருவதற்கு முன்பு முதலாவது திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகளின் தாயாக இருந்தார். முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகள் இருவரும் முதல் கணவரிடம் உள்ளனர். இந்த நிலையில் அரசு பள்ளியில் ஆசிரியை பணியில் சேர்ந்த பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவர், கருவுற்றிருந்தார்.


இதற்காக அவர் தமது பள்ளிக்கல்வித்துறையின் வாயிலாக பிரசவ கால விடுமுறைக்காக விண்ணப்பித்த போது, ஏற்கனவே அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக அவருக்கு பிறக்க உள்ள குழந்தைக்கு பிரசவ கால விடுமுறை அளிக்க இயலாது என கூறப்பட்டது. 


இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நபர் நீதிபதி அமர்வில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பார்த்திபன், "ஆசிரியைக்கு 2021ஆம் ஆண்டு அக்டோபர் 11 முதல் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி வரை ஒரு ஆண்டு காலத்துக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது,"என்று உத்தரவிட்டார்.


இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் இருநபர் நீதிபதி கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், "திருமணம் ஆன அரசு பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு என்பது சட்டப்பூர்வமானதுதான். ஆனால், அடிப்படை உரிமை அல்ல,"என்று கூறியது. எனவே, ஒரு நபர் நீதிபதி அளித்த உத்தரவுக்கு தடை விதித்தது.


இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆசிரியை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள்,


 "மகப்பேறு சலுகைச் சட்டம் என்பது பெண்களில் மகப்பேறு விடுமுறை உரிமையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஒரு தாயாகவும், அரசு ஊழியராகவும் சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதற்கான சாத்தியங்கள் போன்ற நெகிழ்வு தன்மைகளை பெண்களுக்கு அளிக்கிறது,” என்றனர்.


மேலும் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், “பெண் ஆசிரியைக்கு முந்தைய திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்திருந்த போதிலும், இப்போதைய குழந்தைக்கும் அவருக்கு மகப்பேறு உரிமை உள்ளது. பெண் ஆசிரியை அரசு பணியில் சேருவதற்கு முன்பு முதல் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். 


அரசு வேலையில் சேர்ந்த பின்னர், அவர் இரண்டாவது திருமணம் மூலம் குழந்தை பெற்றிருக்கிறார். எனவே, அரசு பணியில் சேர்ந்த பிறகு அவருக்கு குழந்தை பிறந்ததை முதல் குழந்தையாக கருத வேண்டும். மேலும் முதல் திருமணம் மூலம் பிறந்த இரு குழந்தைகள் அவரிடம் இல்லை. முதலாவது கணவரிடம் அதாவது குழந்தைகள் அவரது தந்தையுடன் வசிக்கின்றனர்.


எனவே, மகப்பேறு கால விடுமுறை என்பது மகப்பேறு கால பலன்களோடு இணைந்ததாகும். உடல் நல உரிமை, தனியுரிமை, சம உரிமை, பாகுபாடு காட்டாமை மற்றும் கண்ணியத்திற்கான உரிமை உள்ளிட்டவை போல சர்வதேச மனித உரிமை சட்டம் உள்ளிட்டவற்றில் இனப்பெருக்க உரிமைகள் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


தமிழக அரசின் கொள்கையின் மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நிச்சயமாக பாராட்டத்தக்க நோக்கமாகும், மேலும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதன் நோக்கமும் அதைப் போன்றதுதான். 


நாட்டில் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இரண்டு குழந்தைகள் விதிமுறை என்ற நோக்கமும், தற்போதைய வழக்கு சூழ்நிலைகளில் மகப்பேறு விடுப்பு உட்பட பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. சமூக நோக்கத்தை அடைய, இரண்டும் ஒரு நோக்கமான மற்றும் பகுத்தறிவு முறையில் இணக்கமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad