தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அடுத்த கல்வியாண்டில் 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறதுஇவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுப்பு அறிவிப்பு
"அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த CSR மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொல்லப்பட்டதே தவிர எந்த இடத்திலும் அரசு பள்ளிகளை தத்தெடுப்போம் என்று நாங்களும் சொல்லவில்லை" - தமிழக தனியார் பள்ளிகள் சங்கம்
தமிழ்நாட்டில் 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதாக தகவல் வெளியான நிலையில், அவற்றை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் மறுத்துவிட்டது. அடுத்த கல்வி ஆண்டில் 500 அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அவற்றின் அருகில் உள்ள தனியார் பள்ளிகள் பங்களிப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் பரவின. இவை அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக் கொடுக்கும் செயல் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். ஏழை குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் இந்த செயலை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
இதே போல ஊரக பகுதியில் அடித்தட்டு மக்களின் கட்டணமில்லா கல்வி பெறும் வாய்ப்பை பறிக்கும் அபாயம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் மறுத்துள்ளது.
அரசு பள்ளிகளை மேம்படுத்த சிஎஸ்ஆர் எனப்படும் பெரு நிறுவனம் சமூக பொறுப்பு நிதி மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று மட்டுமே கூறப்பட்ட நிலையில், எந்த ஒரு இடத்திலும் அரசு பள்ளிகள் தத்து எடுக்கப்படும் என்ற வார்த்தை பயன்படுத்தவில்லை என்று அச்சங்கம் தெளிவுபடுத்தி உள்ளது. சொல்லப்படாத ஒரு வார்த்தையை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் அரசு பள்ளிகளின் சீரமைப்பு சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment