தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுவதால் தொடக்க கல்வித்துறையில், 2,200க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
'இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற வேண்டும் எனில், டி.இ.டி., என்ற ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு தரப்பிலும், தொடக்கக் கல்வியை சேர்ந்த இரண்டு சங்கங்கள் சார்பிலும், தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வழக்கு இதுவரை, 20 முறைக்கு மேல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதனால், இரண்டு ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதன் எதிரொலியாக, தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வும் நடக்கவில்லை. தற்போது, 2,200க்கும் மேற்பட்ட அரசு தொடக்க பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பதவி உயர்வு கிடைக்கவில்லை என, ஆசிரியர்கள் அதிருப்தி ஒருபுறம், மாணவர்களின் கல்வி பாதிப்பு மறுபுறம் என, தொடக்கக்கல்வி முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நடுநிலை பள்ளிகளின் நிலைமை இதை விட மோசமாக உள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
பதவி உயர்வு என்பது, வெறும் ஆசிரியர்களின் நலன் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல. மாணவர்களின் கல்வித்தரம் சார்ந்ததாக கொள்ளவேண்டும்.
ஆயிரக்கணக்கான தொடக்க பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லாததால், கற்றல் கற்பித்தல் சார்ந்த சுமையை மட்டுமல்ல, நிர்வாகம் சார்ந்த பணியையும் ஆசிரியர்கள் தான் கவனிக்க வேண்டியுள்ளது.
கற்றலின் பரிமாணத்தை அடியோடு புரட்டி போடும் இப்பிரச்னையை முக்கியமானதாக கருதி, மாணவர்கள் நலன்சார்ந்த பாதிப்புகள் குறித்து வலுவான வாதங்களை, நீதிமன்றத்தில் தமிழக அரசு முன் வைக்க வேண்டும்.
இப்பிரச்னைக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்று கலந்தாய்வு நடத்த வேண்டும். அதிகாரிகளும் இதில் ஆர்வம் காட்ட வேண்டும். வரும் மே மாதம் கலந்தாய்வு நடத்த, தமிழக அரசு எவ்வழியிலாவது திட்டமிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment