SLAS தேர்வு - உடனே நிறுத்த ஆசிரியர்கள் கோரிக்கை - Asiriyar.Net

Thursday, January 23, 2025

SLAS தேர்வு - உடனே நிறுத்த ஆசிரியர்கள் கோரிக்கை

 



'தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை சார்பில், மாநில அடைவு சர்வே தேர்வு நடத்துவது தேவையற்றது. மாணவர்களுக்கு தேர்வு அச்சத்தை ஏற்படுத்தும்' என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


தொடக்க கல்வித்துறை சார்பில் எஸ்.எல்.ஏ.எஸ்., எனும் மாநில அளவிலான கற்றல் அடைவு சர்வே தேர்வு, பிப்., 4, 5, 6ம் தேதிகளில் நடக்கிறது. 45,924 அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகள் படிக்கும், 10.5 லட்சம் மாணவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படும்.


மாணவர்கள் எவ்வளவு துாரம் கற்றலில் சாதித்துஉள்ளனர் என்பதை குறிக்கும் அடைவு திறன் கண்டறியப்பட உள்ளது.


விடை குறிப்பிட வேண்டிய கேள்வித்தாளான ஓ.எம்.ஆர்., ஷீட்டில், தமிழ், ஆங்கிலம், கணிதத்தில் இருந்தும், 8ம் வகுப்புக்கு கூடுதலாக அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த தேர்வு தேவையற்றது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்து கூறியதாவது:


கல்வி அதிகாரிகள் அடிக்கடி வந்து, மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்கின்றனர். இந்த சூழலில் தேர்வின் மூலம் ஆய்வு என்பது தேவையற்றது.


இது, மாணவர்களுக்கு ஒரு வித தேர்வு அச்சத்தை ஏற்படுத்துகிறது. விடை குறிப்பிடும் தாளான ஓ.எம்.ஆர்., ஷீட்டில் ஆதார் எண், பிறந்த தேதி போன்றவற்றை குறிப்பிட கூறுகின்றனர்.


மூன்றாம் வகுப்பு மாணவர், ஆதார் எண்ணை நினைவில் வைத்திருப்பது கடினம். மேலும் இத்தேர்வை பயிற்சி ஆசிரியர்கள் தான் மதிப்பீடு செய்கின்றனர். இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, இந்த தேர்வை உடனே நிறுத்த வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.








No comments:

Post a Comment

Post Top Ad