அரசு பள்ளியில் மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு - அதிகாரிகள் நேரில் விசாரணை - Asiriyar.Net

Wednesday, January 29, 2025

அரசு பள்ளியில் மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு - அதிகாரிகள் நேரில் விசாரணை

 



கண்டாச்சிபுரம் : விக்கிரவாண்டி அருகே 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அடுத்தடுத்து 4 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 10ம் வகுப்பு வரை 300க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று காலை அனைவரும் வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது அப்பள்ளியில் 10ம் வகுப்பு பயில்கின்ற அதே ஊரை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் காலை 9 மணியளவில் மயக்கம் வருவதாக கூறியுள்ளார்.


தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோரை வரவழைத்து அருகிலுள்ள தும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மேலும் அவர் மயக்கம் வரும் முன் குடித்ததாக கூறிய வாட்டர் கேன் நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அதில் அதிக குளோரின் கலந்துள்ளதாக கூறப்படுகிறது.


தொடர்ந்து அதே பள்ளியில் 10ம் வகுப்பு பயில்கின்ற தாங்கல் கிராமத்தை சேர்ந்த 3 மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம் வருவதாக கூறி மயக்கமடைந்துள்ளனர். உடனே ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து அருகிலுள்ள தும்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர்.


அதில் மூவருக்கும் அதிக காய்ச்சல் மற்றும் காலை சரியாக உணவருந்தாமல் இருந்ததால் மயக்கமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மாணவிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனிடையே அப்பகுதியில் சமூக வலைத்தளங்களில் பள்ளியில் குடிநீர் குடித்த மாணவிகள் மயக்கமடைந்ததாக தகவல்கள் பரவியது.


இதையடுத்து மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய உதவி இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் பள்ளியில் உள்ள நீரை பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். மேலும் அப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் கூறுகையில், மாணவ- மாணவிகள் யாரும் பள்ளியில் உள்ள நீரை குடிப்பதற்கு பயன்படுத்துவதில்லை. முகம், கை, கால்கள் கழுவுவதற்கு மட்டுமே பள்ளியில் உள்ள நீரை பயன்படுத்துகின்றனர்.


மாணவர்கள் குடிக்க வீட்டிலிருந்தே வாட்டர் கேனில் குடிநீர் எடுத்து வருகின்றனர் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அருகிலுள்ள கஞ்சனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக குண்டலபுலியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளை பரிசோதித்து கபசுர குடிநீர் மற்றும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad