அரசுப் பள்ளியில் மாணவன் உயிரிழப்பு - ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிதார் - Asiriyar.Net

Saturday, January 25, 2025

அரசுப் பள்ளியில் மாணவன் உயிரிழப்பு - ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிதார்

 



சிவகங்கையில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே உள்ள பொய்யாவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் சக்தி சோமையா (வயது 14) என்ற மாணவன் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.  


பள்ளியில் கம்யூட்டர் பாடப்பிரிவின் போது, கணினி ஆய்வகத்தில் கணினிக்கு இணைப்பு கொடுக்க பள்ளியின் உதவியாளர் மாணவர் சக்தி சோமையாவிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி கணினிக்கு இணைப்பு கொடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக மாணவன் சக்தி சோமையாவை மின்சாரம் தாக்கியுள்ளது.


இதையடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனைக் காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். 


அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவே மாணவனின் மரணத்திற்குக் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 


இது தொடர்பாக சாக்கோட்டை போலீசார் மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் ராஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அரசுப் பள்ளியில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மாணவனின் உடலுக்கு உடற்கூறாய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர்.


இந்நிலையில் இந்த சம்பவத்தில் பொய்யாவயல் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் ஆசிரியர் பாண்டி முருகன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலு மொத்த உத்தரவிட்டுள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad