மாணவர்களுக்கு தண்டனை - ஆசிரியர்களின் நிலை என்ன? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, January 28, 2024

மாணவர்களுக்கு தண்டனை - ஆசிரியர்களின் நிலை என்ன?

 



சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் சிலர் போலீஸ் ஸ்டேஷன் சுவரில் அமர்ந்து திருக்குறள் எழுதிய செய்தி சமீபத்தில் பொதுமக்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. திருநெல்வேலி நகரில் பள்ளி மாணவர்கள் சிலர் பொது இடத்தில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட சம்பவம் குறித்த தகவல் போலீசின் கவனத்திற்கு வந்தது. கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் மாணவர்களின் பட்டியலை போலீசார் தயாரித்தனர்.


மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால் அவர்களின் கல்வியும், எதிர்கால வாழ்க்கையும் பாழாகிவிடும் என்பதை உணர்ந்த போலீசார் வித்தியாசமான தண்டனையை வழங்கினர். திருக்குறளை முழுமையாக எழுதிக்காட்ட வேண்டும் என்பதே அந்த தண்டனை.


விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லுாரி மாணவர்கள் சிலர் குடிபோதையில் கல்லுாரிக்கு வந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மீண்டும் கல்லுாரியில் சேர்க்க உத்தரவிடக்கோரி அவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். விசாரித்து நீதிபதி வழங்கிய தீர்ப்பு, சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட பலரின் பாராட்டுகளை பெற்றது.


மது அருந்திய அந்த மாணவர்கள் சுதந்திர தினத்தன்று விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் துப்புரவு பணி செய்ய வேண்டும் என்றும், மாலையில் மது பழக்கத்தின் தீமைகளை எடுத்துரைக்கும் பதாகைகளை ஏந்தி அந்த நினைவு இல்லத்திற்கு வெளியே நிற்கவேண்டும் என்றும் கடந்த ஆகஸ்டில் வழங்கிய தீர்ப்பு தடம்புரண்ட அந்த மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அமைந்தது.


யார் பொறுப்பு?


வளரும் பருவத்திலுள்ள மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு சட்டப்படியான தண்டனை வழங்காமல் அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சமூகநோக்கத்தோடு கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன. காவல்துறையும் மாணவர்களை சீர்திருத்தும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாணவர்கள் சிலரிடம் வெளிப்படும் சிறு தவறுகளை முளையிலேயே கண்டறிந்து களைய நடவடிக்கை எடுக்கவேண்டிய முக்கிய பொறுப்பாளர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள். இவர்கள் இப்பொறுப்பை தற்போது முறையாக செய்கிறார்களா? அல்லது ஏதோ காரணங்களால் தட்டி கழிக்கிறார்களா?


பெற்றோர்களின் நிலை


நசிந்துவரும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையும், பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் நிலையும் இன்றைய சமுதாயத்தில் பரவலாக நிலவுகிறது. இதனால் குழந்தைகள் வளர்ப்பிலும், இளம்பருவத்தில் குழந்தைகள் செய்யும் சிறு தவறுகளை உடனுக்குடன் கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்தும் வாய்ப்பும் இன்றைய சமுதாய சூழலில் குறைந்து வருகிறது. குழந்தை பருவத்தில் போதிய கண்காணிப்பின்றி வளரும் குழந்தைகள் மாணவ பருவத்தில் திசைமாறி பயணிக்க தொடங்கிவிடுகின்றனர். 


இவர்களின் தவறான செயல்பாடுகள் காலம் கடந்து பெற்றோரின் கவனத்திற்கு வருவதால், செய்வது என்ன என்று தெரியாமல் பல பெற்றோர்கள் பிரச்னையை பெரிதாக்கி குழந்தையின் வாழ்க்கையை பாழாக்கிய சம்பவங்களும் உண்டு.


ஆசிரியர்களின் நிலை


சமுதாயத்தில் ஆசிரியர்கள் முன்னிலைபடுத்தப்பட்ட நிலை மெல்ல மெல்ல குறைய தொடங்கியது மட்டுமின்றி, ஆசிரியர்- மாணவர் உறவும், ஆசிரியர்- பெற்றோர் உறவும் நிகழ்கால கல்விமுறையில் பலவீனமடைந்து வருகிறது. நுகர்வோர் கலாசாரம் கல்வி நிறுவனங்களிலும் பரவிவருகிறது. 


பள்ளி மாணவர்களின் நோக்கம் நல்ல மதிப்பெண்கள் பெறுவது தான் என்பதும், மாணவர்களை அதிக மதிப்பெண்கள் வாங்க வைப்பதுதான் பள்ளிகளின் நோக்கம் என்பதும் ஆசிரியர் மற்றும் பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களிடம் நல்லொழுக்கத்தை வளர்ப்பதும் பள்ளிகளின் முக்கியமான நோக்கம் என்பது காலப்போக்கில் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டதும் இளம்பருவத்தினர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்க காரணமாக மைந்துவிட்டது.


திருவள்ளூர் மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் பகவான் போன்று மாணவர்கள் மீது அக்கறை கொண்ட ஆசிரியர்கள் பலர் இருந்தாலும், அவர்கள் சந்திக்க வேண்டிய சவால்கள் பல உள்ளன. தவறு செய்த மாணவனை நல்வழிப்படுத்துவதற்காக உரிமையுடன் கண்டிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் ஆசிரியர்களிடம் வெளிப்படுவதை காணமுடிகிறது.


தண்டனை தீர்வாகாது


இளம்பருவத்திலேயே குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட சிறார்களை சிறைக்கு அனுப்பினால் அங்குள்ள சூழல் அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு பதிலாக முழுமையான தொழில் முறை குற்றவாளிகளாக மாற்றிவிடும். 


இதனால் அவர்கள் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு சிறார் இல்லங்களில்தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர். அந்த சிறார்களின் வாழ்வை புனரமைப்பதற்காக பல்வேறு பயிற்சிகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. 


ஆனால் அந்த கூர்நோக்கு இல்லங்களும், சிறப்பு சிறார் இல்லங்களும் தங்களது இலக்கை நோக்கி முறையாக பயணிக்கிறதா? என்ற வினாவிற்கான விடை ஏமாற்றத்தை அளிக்கிறது. 


அந்த இல்லங்களிலிருந்து சிறுவர், சிறுமியர்கள் தப்பிச்செல்லும் சம்பவம் தொடர்ந்து நடக்கின்றன. குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறார்களின் மனநிலையறிந்து அவர்களின் குணத்தை மாற்ற முயற்சி எடுக்காமல் கூர்நோக்கு இல்லங்களில் அவர்களை அடைத்து வைப்பது இப்பிரச்னைக்கு தீர்வாகாது.


தீர்வு என்ன?


பரபரப்பாக இயங்கிவரும் இன்றைய கணினி உலகில் திறமையையும், ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொண்டால் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை வளரும் பருவத்திலுள்ள குழந்தைகள் மனதில் விதைக்கின்ற செயலை பெற்றோர்கள் பக்குவமான முறையில் செய்தல் வேண்டும். 


வகுப்பறையில் பாடங்களை நடத்துவதோடு மட்டும் தங்களது பணிமுடிந்துவிட்டது என்று ஆசிரியர்கள் கருதாமல் தரமான நுால்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துவதும் ஆசிரியர்களின் பணி என்ற நிலை தொடர வேண்டும். 


ஆசிரியர்கள் - மாணவர்களுக்கு இடையேயான உறவு மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பயண வழிகாட்டியாகவும் இருத்தல் வேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் ஒருமித்து பயணித்தால், தடம்புரள செய்யும் தீயசக்திகளிடமிருந்து மாணவர்களை பாதுகாத்து மாணவர்களின் லட்சியப் பயணத்தை வெற்றிப்பயணமாக அமைத்துவிடமுடியும்.- 

பெ. கண்ணப்பன்

ஓய்வு பெற்ற ஐ.ஜி.,94890 00111



Post Top Ad