குழந்தைகளுக்கான ‘NPS Vatsalya’ ஓய்வூதிய திட்டம் தொடக்கம் - Asiriyar.Net

Thursday, September 19, 2024

குழந்தைகளுக்கான ‘NPS Vatsalya’ ஓய்வூதிய திட்டம் தொடக்கம்

 



குழந்தைகளுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கி வைத்தார்.


18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ‘என்பிஎஸ் வாத்சல்யா' திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை மாதம்அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்புக்காக ஓய்வூதியக் கணக்கில் பணத்தை சேமித்து வரலாம். 



குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பியதும், அவர்கள்அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 


இந்தத் திட்டத்துக்கான பிரத்யேக தளத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிமுகம் செய்தார். தொடக்க விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 75 இடங்களில் இது தொடர்பான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது குழந்தைகளுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் வழங்கப்பட்டது.


‘என்பிஎஸ் வாத்சல்யா' திட்டமானது தற்போது நடைமுறையில் இருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் அங்கமாகும். இத்திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கும். அனைவருக்கும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை கொண்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 



18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் ‘என்பிஎஸ் வாத்சல்யா' கணக்கைத் தொடங்கலாம். வங்கிகள், இந்தியஅஞ்சல் அலுவலகம் மூலமும் இதற்கென்று உருவாக்கப்பட்ட தளம் மூலமும் ‘என்பிஎஸ் வாத்சல்யா' கணக்கைத் தொடங்கலாம்.


ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.1,000 என இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். முதல் மூன்று ஆண்டுகளுக்கு பணத்தைத் திரும்பப் பெற முடியாது. அதன் பிறகு கல்வி, மருத்துவ காரணங்களுக்காக சேமிப்பில் 25 சதவீதத்தை திரும்பப் பெற முடியும். 


அதிகபட்சமாக மூன்று முறைபணத்தை பெறலாம். 18 வயது நிரம்பிய பிறகு சேமிப்பை தடையின்றி எடுக்க முடியும். அதேபோல், சேமிப்பை தேசிய ஓய்வூதியக் கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad