நன்றாக படிக்கும் மாணவர்கள் சக மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து தேர்ச்சி பெற செய்ய வைக்க வேண்டும் அதுதான் உண்மையான பிரண்ட்ஷிப் என அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சத்திரக்குடி மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு செய்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி மேல்நிலைப்பள்ளியில் இன்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடங்களின் தன்மை குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு ஆகிய மூன்று வருடங்கள் மிக முக்கியமானவை. மாணவர்கள் மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்க கூடாது. பதினொன்றாம் வகுப்பு எந்த அளவிற்கு படிக்கிறீர்களோ அதே அளவிற்கு 12ஆம் வகுப்பு ஈசியாக இருக்கும்.
பன்னிரண்டாம் வகுப்பில் முதல் நாளிலிருந்து கஷ்டப்பட்டு படிக்கலாம் என நினைக்கக் கூடாது. பதினொன்றாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்புக்கான பயிற்சியை தொடங்க வேண்டும். அப்பா, அம்மா கஷ்டப்படுவதை நாம் மறந்து விடக்கூடாது. அப்பா, அம்மாவிற்காக படிக்க வேண்டும். கஷ்டப்பட்டு நான்காண்டுகள் படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி அப்பா, அம்மாவை நல்லவிதமாக பார்த்துக் கொள்ளலாம்.
உங்களை பார்த்து இந்த சமுதாயம் மதிக்கும். பாடத்தில் சந்தேகம் என்றால் கையை உயர்த்தி கேட்க வேண்டும். ஆசிரியர் திட்டுவாங்களோ, மாணவர்கள் கிண்டல் செய்வார்களோ என்ற அச்ச உணர்வை கைவிட வேண்டும். நம்மளை நாமே செதுக்கிக் கொள்ளக் கூடிய ஒரு பட்டறை தான் வகுப்பறை. நண்பர்களுடன் சேர்ந்து படிக்க வேண்டும்.
நன்றாக படிக்கும் மாணவர்கள் தங்களது நண்பர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து அந்த மாணவன் அதிக அளவில் மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ண வைத்தேன் என்று சொல்ல வேண்டும், அதுதான் உண்மையான பிரண்ட்ஷிப். ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு ஆசிரியர்களாக மாறி இருக்க வேண்டும். பள்ளியில் ஒழுக்கம் மிகவும் முக்கியம்.
அதிகளவு மதிப்பெண் பெற்று இந்த பள்ளியை விட்டுப் போனேன் என்பது முக்கியமல்ல, நல்ல பிள்ளை என பெயர் எடுப்பது நமது ஆசிரியருக்கு நாம் கொடுக்கக்கூடிய நல்லாசிரியர் விருது. அப்பா, அம்மாவின் கஷ்டத்தையும், ஆசிரியரின் உழைப்பையும் நினைத்து படிக்க வேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
No comments:
Post a Comment