உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில், D.L. Public School என்றொரு பள்ளி உள்ளது, தங்கள் பள்ளிக்கு 'பெரியளவில் பெயரும் புகழும் கிடைக்க குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும்' என யாரோ ஒருவர் சொன்னதை நம்பி 2ஆம் வகுப்பு குழந்தையை நரபலி கொடுத்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட அப்பள்ளியின் பணிப்பாளர் தினேஷ் பாகல், அவரது தந்தை ஜஷோதன் சிங், 3 ஆசிரியர்கள் (லக்ஷன் சிங், வீரப்பன் சிங் மற்றும் ராம்பிரகாஷ் சோலன்கி) ஆகிய ஐவர் இணைந்து தங்கள் பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்த 2ஆம் வகுப்பு படிக்கும் குழந்தையை கொலை செய்துள்ளனர்.
இவர்களில் ஜஷோதன் என்பவர்தான், இச்சம்பவம் நடப்பதற்கு முக்கிய காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. ஜஷோதன் பில்லி சூனியத்தில் கொண்ட நம்பிக்கையால் தன் மகனும் பாடசாலையின் பணிப்பாளருமான தினேஷை இக்கொடூர செயலுக்கு சம்மதிக்க வைத்து இச்செயலில் ஈடுபடுத்தியுள்ளார் என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இது குறித்து பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில், “பாடசாலையின் வெற்றிக்காகவும் புகழுக்காகவும் இதை சடங்காக செய்துள்ளனர். வேறு யாரரெல்லாம் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம். இந்த ஜஷோதன், ஏற்கெனவே ஒரு மாணவரை கொல்ல முயன்றுள்ளார். அது நிகழாமல் போயுள்ளது. இதையடுத்து இக்குற்றத்தை செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட இப்பாடசாலையில் 600 குழந்தைகள் படிக்கின்றனர். மேலும், உயிரிழந்த குழந்தையின் தந்தை, டெல்லியின் ஐ.டி. ஊழியராக இருந்திருக்கிறார்.
கடந்த திங்களன்று விடுதி ஊழியர்கள் மற்றும் சக மாணவர்கள், இம்மாணவர் நினைவற்று இருப்பதை கண்ட நிலையில், நிர்வாகத்துக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், நிர்வாகம் தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல காட்டிக்கொண்டு, சிறுவனின் தந்தைக்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டு, 'உங்கள் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறான்' என்று கூறி சிறுவனின் தந்தையை வரச்சொல்லி உள்ளனர்.
அவர் விரைந்து சென்றபோது, குழந்தை அங்கே இல்லை. விசாரித்தபோது மருத்துவமனை அழைத்துச் சென்றதாக கூறியுள்ளனர். ஆனால், குழந்தையின் உடலுடன் அந்த பாடசாலை நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் பல மணி நேரமாக காரில் பயணித்துக்கொண்டிருந்தது பின்னாட்களில் விசாரணையில்தான் தெரியவந்துள்ளது.
வெகுநேரமாக குழந்தை எங்கே என்றே தெரியாமல் தவித்த அந்த தந்தை, உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விசாரணையில், தினேஷ் பாகலின் காரில் குழந்தை (உடலில் கழுத்துப்பகுதியில் காயத்துடன்) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்பின்னர், விசாரணை தொடர்ந்தபோது, பாடசாலைக்கு பெயரளவில் புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக நரபலி கொடுத்தது குறித்து தெரியவந்துள்ளது. இந்த குற்றம் தொடர்பாக ஐவர் கைதான நிலையில்,மேலும், தொடர்புடைய ஐவர் மீதும் பி.என்.எஸ் 103 (1) பிரிவின் கீழ் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment