துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் - புதிய அமைச்சர்கள் யார், பதவி இழக்கும் அமைச்சர்கள் யார்? - முழு விவரம் - Asiriyar.Net

Saturday, September 28, 2024

துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் - புதிய அமைச்சர்கள் யார், பதவி இழக்கும் அமைச்சர்கள் யார்? - முழு விவரம்

 



அமைச்சரவை மாற்றம் குறித்து இன்று ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்



தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்.


சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உடனடியாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவைப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது. இந்தப் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.



இந்நிலையில், கடந்த சில வாரங்களாக உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு நிர்வாகிகள் பேசி வந்தனர். திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எஸ்.எஸ். பழனி மாணிக்கம், “உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டுங்கள்” என மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.


மொத்தம் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படுகிறது.


உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கயல்விழி செல்வராஜூக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிவேந்தனுக்கு ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


அதேநேரம், அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.



செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி. செழியன், ராஜேந்திரன் போன்றோருக்கு புதிதாக அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மோசடி வழக்கில் சிறை சென்று, பிணையில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


நாளை பதவியேற்பு விழா நடைபெறுவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தெரிகிறது.








No comments:

Post a Comment

Post Top Ad