பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை -- கல்வித்துறைக்கு கோரிக்கை - Asiriyar.Net

Tuesday, September 24, 2024

பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை -- கல்வித்துறைக்கு கோரிக்கை

 



நடப்பு ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியிட்டது. அதில், 220 வேலை நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக 210 நாட்கள் வரை மட்டுமே வேலை நாட்கள் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அதனை 220 ஆக மாற்றியதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.



எதிர்ப்பைத் தொடர்ந்து பள்ளி வேலை நாட்களை 210 ஆக குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் கல்வியாண்டு நாட்காட்டியில் தெரிவித்தபடி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வும் நடந்துவருகிறது.


பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கு செப்.19-ம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில், 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப்.20-ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது. வருகிற 27-ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.


தேர்வு முடிந்ததும், வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 2-ந்தேதி (புதன்கிழமை) வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. காலாண்டு விடுமுறைக்குப் பின்னர், வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவிருப்பதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.


ஆனால் காலாண்டு விடுமுறையை அதிகரிக்க கோரி, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அமைச்சர் அன்பில் மகேஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "முந்தைய ஆண்டுகளில் காலாண்டு விடுமுறை 9 நாட்கள் விடப்படும். ஆனால், நடப்பாண்டு 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாளில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்று அரசு விடுமுறை. இடையில் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது.



காலாண்டு விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன்பிறகு, வெள்ளிக்கிழமை மட்டுமே பள்ளி இயங்கும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், அக்டோபர் 3, 4-ஆம் தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டால் மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு கிடைக்கும்" என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை அடுத்து 9 நாட்கள் காலாண்டு விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்களும் இருந்து வருகின்றனர்.


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ராமு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-



கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு பிறகு 9 நாட்கள் விடுமுறை விடப்படும். ஆனால், நடப்பாண்டு, செப்டம்பர் 28-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரையில் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்று அரசு விடுமுறை. இடையில் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


காலாண்டு விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன்பிறகு, வெள்ளிகிழமை மட்டுமே பள்ளி இயங்கும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே, அக்டோபர் 3, 4-ந் தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டால் மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு கிடைக்கும்.


ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளுக்கும் அவகாசம் கிடைக்கும். எனவே, பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad