ஆசிரியர் இடமாற்றம் - கட்டியணைத்துக் கதறி அழுத மாணவர்கள் - Asiriyar.Net

Friday, September 27, 2024

ஆசிரியர் இடமாற்றம் - கட்டியணைத்துக் கதறி அழுத மாணவர்கள்

 




ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ‘பெல்’ குடியிருப்பு வளாகத்தில் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.



இந்தப் பள்ளியில் கடந்த 17 ஆண்டுகளாக சந்தான லட்சுமி என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நீண்ட நாள்களாக மாணவ, மாணவியருடன் நல்ல முறையில் பழகி எளிமையான முறையில் கல்வி கற்பித்து வருவதால் அனைவருக்கும் பிடித்த ஆசிரியராகவும் மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியராகவும் இருந்து வந்தார்.


இந்நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அவரை வேறு பள்ளிக்கு மாற்ற மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதை அறிந்த மாணவர்கள், ஆசிரியர் வேறு பள்ளிக்குச் செல்லக்கூடாது எனத் தடுத்து கதறி அழுதனர்.



பள்ளி மாணவர்களின் பாசப்பிடியிலிருந்து வெளியேற முடியாமல் ஆசிரியை தவித்தார். மாணவர்கள் ஆசிரியரை சூழ்ந்துகொண்டுத் தேம்பி தேம்பி அழுதனர்.


“மிஸ், நீங்க போகாதீங்க மிஸ் பிளீஸ், பிளீஸ்,” என்று சில மாணவர்கள் மழலைக் குரலில் அழுதுகொண்டே கூறினர். அதைப் பார்த்து ஆசிரியருக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது.


கண்ணீரைத் துடைத்துக்கொண்டே பிள்ளைகளுக்கு அவர் ஆறுதல் கூறினார். அதைப் பார்த்த மற்ற ஆசிரியர்களுக்கும் கண் கலங்கியது. இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


ஆசிரியர் மாற்றப்பட்ட தகவல் அறிந்து பள்ளி மாணவர்களின் பெற்றோரும் வந்தனர். தங்கள் பிள்ளைகள் தேம்பி தேம்பி அழுவதைக் கண்டு அவர்களுக்கும் கண்ணில் நீர் பெருக்கெடுத்தது.


தங்கள் பகுதியைச் சேர்ந்த பிள்ளைகள் பள்ளிக்குப் போகமாட்டோம் என அடம்பிடித்ததாகவும் இந்த ஆசிரியர் வந்த பிறகுதான் அவர்கள் ஆர்வத்துடன் காலையிலேயே எழுந்து பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

Post Top Ad