தமிழகத்தில் சி.இ.ஓ., அலுவலகங்களில் தணிக்கை பிரிவு உருவாக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் செலவினங்கள் சென்னை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் உள்ள நிதி ஆலோசகர், முதன்மை கணக்கு அலுவலர்கள் தலைமையில் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஒரே இடத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு தணிக்கை மேற்கொள்வதால் பள்ளிவாரியான தணிக்கையில் காலதாமதம் ஏற்படுகிறது.
தணிக்கை பணி நிலுவையால் பள்ளிகளில் ஓய்வுபெறும் ஆசிரியர், தலைமையாசிரியர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை உரிய நேரத்தில் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மனஉளைச்சலில் உள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணங்களை அரசே வழங்குகிறது. செலவினங்கள் மேற்கொள்ள கல்வித்துறை தெளிவான அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதனால் சென்னையில் செயல்பட்டு வரும் தணிக்கை துறையை கலைத்துவிட்டு அந்தந்த சி.இ.ஓ., அலுவலகங்களிலேயே தணிக்கை பிரிவு உருவாக்க வேண்டும். இதனால் தணிக்கை ஆட்சேபனைகள் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.
ஆண்டுதோறும் மே, ஜூனில் திட்டமிட்டு கல்வி மாவட்டம் தோறும் சிறப்பு முகாம் நடத்தி தணிக்கை பணியை முடிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையால் ஓய்வுக்கு பின் பணப் பலன்களை ஆசிரியர்கள் பெறுவதில் சிரமம் இருக்காது. கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment