பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையை அக்டோபர் 6 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. 6 - 10 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் 19 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையடுத்து செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும். மேலும் அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விடுமுறை வெறும் 5 நாட்கள் மட்டுமே வருவதால், இதனை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
மேலும், காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து திருச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை வந்துள்ளது; இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அக்டோபர் 6 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடித்து 07.10.2024 (திங்கட்கிழமை) அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment