அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு அனுமதி - பள்ளிக்கல்வித்துறை - Asiriyar.Net

Sunday, May 12, 2024

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு அனுமதி - பள்ளிக்கல்வித்துறை

 
பள்ளிக்கல்வித்துறையின் நிதி உதவி பெற்று தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கான ஊதியம் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.


ஆசிரியர் பணியிடங்களை நிதியுதவி பெறும் பள்ளியின் நிர்வாகம் நியமனம் செய்து கொள்ளும். அந்த நியமனங்களை தகுதியின் அடிப்படையில் ஆய்வு செய்து பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கும். ஆசிரியர் தகுதி தேர்வு 2019ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமனம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பாணை வழங்கி உள்ளது.


இத்தீர்ப்பாணையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்காற்றும் சட்டம், 2018-க்குரிய விதிகள் வகுத்தளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வரையில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்தும், பள்ளி நிர்வாகத்தால் பணியாளர் நிர்ணயம் செய்தல் குறித்தும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இதனடிப்படையில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது.


ஆசிரியர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்கள்:


சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பாணை வழங்கிய 9.4.2019-க்கு முன்னர் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்குட்பட்டு நியமிக்கலாம்.


1991 - 92க்கு முன்னர் பணியிடத்திற்கான மானியம் அனுமதிக்கப்பட்டு, பணி நியமன நாளில், அக்கல்வியாண்டிற்குரிய பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி அனுமதிக்கப்பட்ட நிரப்ப தகுந்த காலிப்பணியிடங்களில், 9.4.2019 -க்கு முன்னர் பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட நியமனங்களுக்கு ஏற்பளிக்கலாம்.

தனித்த சிறுபான்மை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளைப் பொருத்தவரையில் (minority stand alone management), அப்பள்ளிகளில் குறிப்பிட்ட பாடத்தில் உபரி ஆசிரியர்கள் இல்லாத நிலையில், அப்பணியிடத்திற்குரிய நிரப்ப தகுந்த காலிப்பணியிடத்தில் பள்ளி நிர்வாகம் நேரடி நியமனம் மேற்கொண்டிருப்பின், நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2ல் உரிய விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்தோடு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகள் உள்ளிட்ட ஏனையத் தகுதிகள் பெற்றிருப்பின் அத்தகைய நியமனங்களுக்கு மட்டும் ஏற்பளிக்கலாம்.


சிறுபான்மை கூட்டு மேலாண்மை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளைப் பொறுத்தவரையில் (Minority Corporate management schools) அந்நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும், அக்குறிப்பிட்ட பாடத்தில் உபரி பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் பணியாற்றவில்லை என்ற நேர்வில், குறிப்பிட்ட ஒரு பள்ளியில் வழிகாட்டு நெறிமுறைகளின் படி குறிப்பிட்டுள்ளவாறு நிரப்ப, தகுந்த காலிப்பணியிடத்தில் பள்ளி நிர்வாகம் நேரடி நியமனம் மேற்கொண்டிருப்பின், நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2ல் உரிய விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெற்று நடைமுறையிலுள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்காற்றும் சட்டம் மற்றும் விதிகளில் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகள் உள்ளிட்ட ஏனையத் தகுதிகள் பெற்றிருப்பின் அத்தகைய நியமனங்களுக்கு மட்டும் ஏற்பளிக்கலாம்.


சிறுபான்மையற்ற கூட்டு மேலாண்மை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளைப் பொறுத்தவரையில் (Non-Minority Corporate management schools) அந்நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும், அக்குறிப்பிட்ட பாடத்தில் உபரி பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் பணியாற்றவில்லை என்ற நேர்வில், பணியிடம் நிரப்பப்படுவதற்கு துறையால் முன் அனுமதி வழங்கப்பட்டிருப்பின் குறிப்பிட்ட ஒரு பள்ளியில் வழிகாட்டு நெறிமுறைகள் படி அக்குறிப்பிட்ட பாடத்திற்கு நிரப்ப தகுந்த காலிப்பணியிடத்தில் பள்ளி நிர்வாகம் நடைமுறையிலுள்ள இனச்சுழற்சி முறையினை பின்பற்றி (communal rotation) நேரடி நியமனம் மேற்கொண்டிருப்பின், நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2-ல் உரிய விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெற்று நடைமுறையிலுள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்காற்றும் சட்டம் மற்றும் விதிகளில் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகள் உள்ளிட்ட ஏனையத் தகுதிகள் பெற்றிருப்பின் அத்தகைய நியமனங்களுக்கு மட்டும் ஏற்பளிக்கலாம்.


கூட்டு மேலாண்மை நிர்வாகத்தினைப் பொருத்தவரையில், அம்மேலாண்மையின் கீழ் வெவ்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், இதுதொடர்புடைய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்தும் தொடர்புடைய பாடத்தில் உபரி ஆசிரியர் எவரும் பணியாற்றவில்லை என்பதற்குரிய சான்று பெற்று அதனடிப்படையிலேயே நியமன ஒப்புதல் வழங்கலாம்.


சிறுபான்மையற்ற பிற தனித்தியங்கும் பள்ளிகளைப் பொருத்தவரையில் (Non Minority single management schools) காலிப்பணியிடம் நிரப்புவதற்கு துறையால் முன் அனுமதி வழங்கப்பட்டிருப்பின், அத்தகைய நேர்வுகளில் மட்டும், அப்பள்ளியில் அப்பாடத்தில் உபரி ஆசிரியர்கள் இல்லாத நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் பத்தி-(i)-ல் குறிப்பிட்டுள்ளவாறு, நிரப்ப தகுந்த காலிப்பணியிடத்தில் பள்ளி நிர்வாகம் நடைமுறையிலுள்ள இனசுழற்சி முறையினை (communal rotation) நேரடி நியமனம் மேற்கொண்டிருப்பின், நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2ல் உரிய விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெற்று நடைமுறையிலுள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்காற்றும் சட்டம் மற்றும் விதிகளில் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி உள்ளிட்ட ஏனையத் தகுதிகள் பெற்றிருப்பின் அத்தகைய நியமனங்களுக்கு மட்டும் ஏற்பளிக்கலாம்.


9.4.2019-க்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பணிநியமனங்களுக்கு ஏற்பளிப்பு வழங்க பரிசீலிக்கும்போது, பணி நியமனம் தொடர்பான கோப்புகளை முழுமையாக முதன்மைக் கல்வி அலுவலர் கூர்ந்தாய்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் விதிகள் நெறிமுறையின் அடிப்படையில், தேவையேற்படும் நேர்வுகளில் மட்டுமே நேரடி நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும்.


அத்துடன் பள்ளி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பணிநியமன ஆணை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு ஒப்புதல் கோரி பெறப்பட்ட முந்தைய கோப்புகள், பணியாளரின் வருகைப் பதிவேடு, பணியாளருக்கு பள்ளி நிர்வாகத்தால் ஊதியம் வழங்கப்பட்ட பதிவேடு மற்றும் தொடர்புடைய இதர ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து அசல் ஆவணங்களையும் முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.


காலிப்பணியிடம் ஏற்பட்ட நாள், அந்நாளில் அப்பணியிடம் வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளது போன்று நிரப்ப தகுந்த காலிப்பணியிடமா? என்பதனை உறுதிப்படுத்துவதுடன், ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து கல்விச் சான்றுகளையும் ஒருங்கே பரிசீலித்து தகுதியுள்ள நேர்வுகளுக்கு மட்டும் ஏற்பளிப்பு ஆணையினை வழங்கி, அதன் விவரத்தினை EMIS-ல் பதிவேற்றம் செய்திட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Top Ad