தமிழகத்தில் ஆசிரியா் பொது மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து மாறுதல் பெற விருப்பமுள்ள ஆசிரியா்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
அதன்படி, மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு மே 13-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 82,477 ஆசிரியா்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனா்.
தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா் மாறுதலுக்கு 18,920, பட்டதாரி ஆசிரியா் மாறுதலுக்கு 9,294, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் மாறுதலுக்கு 5,813, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மாறுதலுக்கு 1,640 என 35,667 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
இதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் என 46,810 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 82,477 ஆசிரியா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
முன்னதாக, ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அதற்காக மே 13 முதல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே சா்வா் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் மே 25 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் ஆசிரியா் கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment