தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் - முன்னாள் முதல்வர் அறிக்கை - Asiriyar.Net

Friday, May 31, 2024

தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் - முன்னாள் முதல்வர் அறிக்கை

 அரசு ஊழியர்களை அழைத்து பேசி அவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 


அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் உன்னதப் பணியினை செய்பவர்கள் அரசு ஊழியர்கள். இந்திய சுதந்திரத்திற்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசமின்றி அரசு ஊழியர்கள் கடமை உணர்வோடு மக்கள் பணியாற்றி வருகின்றனர்.


அரசு இயந்திரம் நன்கு இயங்குவதற்கு அவ்வப்போது ‘உராய்வு எண்ணெய்’ தடவுவது போல், அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டு அவற்றை களைவதை அனைத்து அரசுகளும் செவ்வனே செய்து வந்தன. ஆனால் அரசு ஊழியர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. நம் நாட்டிலேயே அதிகமான, சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தமிழ்நாட்டில் பணியாற்றி வருகின்றனர். தங்களது குறைகளை பலமுறை சங்கங்களின் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை அவர்களது கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காணவில்லை.


மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துப் பணியாளர்கள், நியாய விலைக் கடை ஊழியர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் என்று அனைத்துத் துறை ஊழியர்களும் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தினார்கள். ஆனால், இதுவரை இந்த தேர்தல் சமயத்தில் அரசு ஊழியர்கள் தொடர்பாக அள்ளி வீசிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று அரசு ஊழியர் சங்கங்களும், போக்குவரத்து ஊழியர் சங்கங்களும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


மேலும், அனைத்துத் துறைகளிலும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முத்தாய்ப்பாக, தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் தனிப் பிரிவிலேயே 25-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், இதனால், இவர்களது பணிகளையும் தாங்கள் கூடுதலாக கவனிப்பதாகவும், எனவே, உடனடியாக முதலமைச்சருடைய தனிப் பிரிவு அலுவலகத்தில் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.


எனவே, கைத்தறி ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள், மருத்துவர் பணியாளர் சங்கங்கள், ஆசிரியர் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர் சங்கங்களையும் அழைத்துப் பேசி, அவர்களுடைய குறைகளை உடனடியாகக் களையவும், தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Post Top Ad