உஷார் - Laptop சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து மருத்துவர் உயிரிழப்பு - Asiriyar.Net

Wednesday, May 29, 2024

உஷார் - Laptop சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து மருத்துவர் உயிரிழப்பு

 
மடிக்கணினிக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்ததில் பயிற்சி பெண் மருத்துவர் உயிர்இழந்தார். இச்சம்பவம் அயனாவரத்தில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.


இதுகுறித்து போலீஸ் தரப்பில்கூறப்படுவதாவது: நாமக்கல்மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சரனிதா (32). இவர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.இவரது கணவர்உதயகுமார் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில்மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது.


சரனிதா, சென்னை அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கி படித்து வந்தார். இந்நிலையில், கணவர் உதயகுமார் நேற்று முன்தினம் போனில் பலமுறை தொடர்புகொண்டும் சரனிதா போனை எடுத்துப் பேசவில்லை.


இதனால், சந்தேகம் அடைந்த கணவர், இதுகுறித்து மனைவி தங்கியுள்ள விடுதியின் போனுக்கு அழைத்துப்பேசி, மனைவி குறித்து கேட்டுள்ளார்.


இதையடுத்து, விடுதி ஊழியர்கள் சரனிதா தங்கியிருந்த அறை சென்று பார்த்தபோது அங்கு மடிக்கணினி சார்ஜர் ஒயரை பிடித்தபடி, சரனிதா கீழே விழுந்து இறந்து கிடந்தார்.


அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகத்தினர் இதுகுறித்து அயனாவரம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடம் விரைந்து சரனிதா உடலைமீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், மடிக்கணினிக்கு சார்ஜ் போடும்போது, மின்சாரம் பாய்ந்ததில் சரனிதா உயிரிழந்தது தெரியவந்தது. இதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மனைவி இறப்பு குறித்து அவரதுகணவர் உதயகுமாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.


என்ன செய்ய வேண்டும்? - லேப்-டாப்பை சார்ஜ் செய்யும்போது பின்பற்ற வேண்டியவை குறித்து சென்னை தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையின் தலைவர் டாக்டர் பி. தினகரன் கூறியது:


லேப்ட-டாப்-ஐ சார்ஜ் செய்ய எப்போதும் ஒரிஜினல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக வோல்டேஜ் திறன் கொண்ட சார்ஜரை பயன்படுத்த கூடாது. லேப்-டாப் பேட்டரியில் சார்ஜ் 30 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெயிலில் வைத்துக்கொண்டோ குளிரான பகுதியிலோ வைத்தோ சார்ஜ் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


லேப்-டாப் பேட்டரியில் 100 சதவீதம் சார்ஜ் முழுமை அடைந்தவுடன் சார்ஜரை உடனடியாக எடுத்துவிட வேண்டும். லேப்-டாப் சூடாவதை குறைப்பதற்கு, சார்ஜ் செய்துகொண்டே லேப்-டாப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தினகரன் கூறினார்.Post Top Ad