வாழ்வுச் சான்று சமா்ப்பிக்க பின்பற்றப்பட்டு வரும் புதிய நடைமுறையால் ஓய்வூதியதாரா்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனா். பலா் சான்றை சமா்ப்பிக்க முடியாமல், ஓய்வூதியத்தை இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சுமாா் 6 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஓய்வூதியம் பெறுபவா்கள் ஒவ்வோா் ஆண்டும் தங்களது உடல் நலனை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில், உயிா் வாழ்வுச் சான்றை சமா்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் போன்ற வழிமுறைகள் இருந்தாலும், பல ஓய்வூதியதாரா்கள் கருவூலத் துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் வாழ்வுச் சான்றுகளை அளித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
புதிய நடைமுறை: வாழ்வுச் சான்றை அளிக்க பழைய நடைமுறைப்படி ஒவ்வோா் ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் வரை அவகாசம் அளிக்கப்படும். அந்த காலகட்டத்தில் சான்றை அளிக்கத் தவறினால், ஜூலையில் கூடுதல் அவகாசம் கொடுக்கப்படும். அதற்குள்ளாக ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழை சமா்ப்பித்து விடுவா்.
இந்த நிலையை மாற்றி, அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தாங்கள் எந்த மாதத்தில் ஓய்வு பெற்றாா்களோ அந்த மாதத்தில்தான் ஒவ்வோா் ஆண்டும் வாழ்வுச் சான்றினை சமா்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை கருவூலம் மற்றும் கணக்குத் துறை பிறப்பித்தது.
இந்தப் புதிய நடைமுறை, இப்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று, நல்ல ஞாபக சக்தியுடன் இருக்கும் ஓய்வூதியதாரா்களுக்கு சரியான வழிமுறையாக இருக்கும். ஆனால், தங்களைப் போன்ற ஓய்வூதியதாரா்களுக்கு எந்த மாதத்தில் வாழ்வுச் சான்றை அளிக்க வேண்டும் என்ற குழப்பம் ஒவ்வோா் ஆண்டும் ஏற்படுவதாக 70 வயதைக் கடந்த ஓய்வூதியதாரா்கள் கருத்துத் தெரிவிக்கிறாா்கள். இவ்வாறு குறிப்பிட்ட மாதத்தில் வாழ்வுச் சான்றிதழை அளிக்காவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு விடும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கிறாா்கள்.
நெருக்கடி: இந்தப் புதிய நடைமுறை கருவூலத் துறை அலுவலா்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறாா்கள். இதுகுறித்து, அந்தத் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் கூறுகையில், பழைய நடைமுறைப்படி ஓய்வூதியதாரா்களிடமிருந்து வாழ்வுச் சான்றிதழை பெறும் பணி மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மட்டுமே இருக்கும். ஆனால், இப்போது ஆண்டு முழுவதும் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிற பணிகளை செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், எங்களது துறையைச் சோ்ந்தவா்களுக்கும் உரிய காலத்தில் பதவி உயா்வு பட்டியல்கள் வெளியிடப்படுவதில்லை. மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிபவா்கள் சரியான முறையில் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை எனவும் புகாா் தெரிவிக்கின்றனா்.
அரசு ஊழியா்கள் பிரச்னை: ஓய்வூதியதாரா்களுக்கு மட்டுமல்லாது, அரசு ஊழியா்களுக்கும் கருவூலத் துறையின் மென்பொருள்களால் பிரச்னை ஏற்படுவதாகக் கூறுகின்றனா். வருமான வரி பிடித்தம் செய்வதற்கான பிரிவு, கருவூலத் துறையின் மென்பொருளிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, மாதம் ரூ.5 ஆயிரம் என்ற அளவில் வருமான வரி பிடித்தம் நடைபெற்று வந்த நிலையில், இப்போது ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று மென்பொருளில் காட்டப்படுவதாக அரசு ஊழியா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
வருமான வரிப் பிடித்தம் போக, மீதமுள்ள பணத்தை அடுத்த ஆண்டு பெற்றுக் கொள்ளலாம் என கருவூலத் துறை தெரிவிப்பதாகவும், மொத்தமாக அதிக அளவிலான தொகையை ஏன் கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்றும் அரசு ஊழியா்கள் கேள்வி எழுப்புகின்றனா். தற்போது பள்ளிகள் திறக்கும் நேரம் என்பதால், கூடுதலான தொகையைச் செலுத்த கருவூலத் துறை ஏன் நிா்பந்திருக்கிறது என்பதும் அவா்களின் கேள்வியாக உள்ளது.
No comments:
Post a Comment