தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பெற்றோர்களின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளும் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் அனுப்பப்படும் ஓடிபி கேட்டு வருகின்றனர். ஆனால் ஆன்லைன் மோசடிக்கு பயந்து பெற்றோர்கள் ஓடிபி கூற மறுப்பதால் ஆசிரியர்களுக்கு சிக்கல் முளைத்துள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த காலங்களில் ஆஃப்லைனில் மாணவர்கள் கல்வி விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது டிஜிட்டல் யுகம் என்பதால் மாணவர்களின் விவரங்கள் பெற்றோர்களின் விவரங்கள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பள்ளி கல்வித்துறை எமிஸ் எனும் இணையதளத்தையும் பராமரித்து வருகிறது. இந்த இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் மட்டுமல்லாது பெற்றோர்களின் விவரங்கள் கல்வித் தகுதி அரசின் நலத்திட்டங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவையும் உடனுக்குடன் குறுஞ்செய்தியாக பெற்றோர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒருவேளை மாணவன் பள்ளிக்கு வரவில்லை என்றால் அன்று மாலையே தங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை.. காரணத்தை வகுப்பு ஆசிரியரிடம் தெரிவிக்கவும் என குறுஞ்செய்தி வரும்.
இந்த நிலையில் வருகை பதிவேடு மற்றும் அரசின் திட்டங்களை மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்ப பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக வாட்ஸப் தளம் ஒன்றையும் உருவாக்க இருக்கிறது. இதையடுத்து தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஆசிரியர்களுக்கு புதிய பணி ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு அவர்கள் வைத்திருக்கும் செல்போன் எண் உண்மையானது தானா? தற்போது பயன்பாட்டில் இருக்கிறதா? என உறுதி செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு பள்ளிக்கல்வித்துறை இணையதளம் மூலம் வழங்கப்படும் ஓடிபிஐ பகிர வேண்டும் என கேட்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ஆசிரியர்கள் கேட்கும் ஓடிபியை பெரும்பாலான பெற்றோர்கள் அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பெற்றோர்களின் செல்போன் எண் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள இயலவில்லை என கூறும் ஆசிரியர்கள் இந்த நடவடிக்கையை பள்ளிக் கல்வித் துறை கைவிட வேண்டும் எனவும் பள்ளிகள் திறந்த பிறகு இந்த பணியை மேற்கொள்ளலாம் என கூறுகின்றனர். பெரும்பாலான பெற்றோர்கள் ஓடிபி எண்ணை கூற முடியாது எனவும் நாங்கள் எதற்கு உங்களிடம் ஓடிபி-ஐ சொல்ல வேண்டும் என கேட்டு தகவல பகிர மறுப்பதாக கூறும் ஆசிரியர்கள், மாணவ,மாணவர்கள் பள்ளிக்கு வராத போது அவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொள்வது என்பது சிரமமாக இருப்பதாகவும், இது ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பள்ளிகள் திறந்த பின்பு இந்த பணியை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment