பள்ளி கல்வித்துறையில் அரசு உயர், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஓய்வுபெறும் போது பின்பற்ற வேண்டிய தணிக்கை தடைகள் நீக்கம் தொடர்பாக 50 ஆண்டுகால நடைமுறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இம்மாதம் 31ல் ஓய்வு பெறவுள்ள 1000க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் ஓய்வூதிய பலன்களை பெறமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி, சிறப்பு கட்டணம் நிதி உள்ளிட்ட நிதிச் செயல்பாடுகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்வதால் அவர்கள் ஓய்வுபெறும்போது அவர் பணியாற்றிய பள்ளியில் தணிக்கை தடைகள் இருப்பின் அவற்றை சரிசெய்ய வேண்டும் என்பது நடைமுறை.
ஓய்வின்போது பென்ஷன், சரண்டர் விடுப்பு, ஈட்டா விடுப்புகள் சம்பளம், சிறப்பு சேமநல நிதி இறுதித் தொகை, பொது சேமநல நிதி (ஜி.பி.எப்.,) இறுதித்தொகை, பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தை தொகுத்து பெறுதல் (கிராஜூட்டி அண்ட் கம்யூட்டேஷன்) உள்ளிட்ட பணப் பலன்கள் கணக்கிடப்படும்.
ஓய்வுபெறும் தலைமையாசிரியருக்கு தணிக்கை தடைகள் இருப்பின் சில பணப் பலன்களை நிறுத்திவைத்து பிற பலன்கள் வழங்கப்படும். தணிக்கை தடையை சரிசெய்ய அவகாசம் அளிக்கப்பட்டு, அவை சரிசெய்யப்பட்ட பின் நிலுவைப் பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.
மன உளைச்சல்
ஆனால் தற்போது சென்னை நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலரிடமிருந்து தணிக்கை தடையின்மை சான்று பெற்றால் தான் ஓய்வூதிய கருத்துருக்களே மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்ற புதிய நடைமுறை பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் 31க்குள் ஓய்வு பெறுவோர் இதற்கான தணிக்கை தடையின்மை சான்று பெறுவது சவாலான விஷயம். எவ்வித முன்னறிவிப்பின்றி 50 ஆண்டுகால நடைமுறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் ஓய்வு பெறும் மனநிலையில் உள்ள தலைமையாசிரியர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
சிக்கல்
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில தலைவர் அன்பரசன் கூறியதாவது: வழக்கமாக தலைமையாசிரியர் ஓய்வு பெறும் 6 மாதங்களுக்கு முன் அவரது ஜி.பி.எப்., பிடித்தம் நிறுத்தப்படும். 2 மாதங்களுக்கு முன் ஓய்வு பெறும் நடைமுறைகள் துவங்கும். தணிக்கை தடைகள் இருப்பினும் பணப்பலன்கள் வழங்கப்படும்.
இது 50 ஆண்டுகளாக உள்ள நடைமுறை. ஆனால் புதிய நடைமுறையால் பெறும் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து நிதி ஆலோசகர் ராஜாவிடம் கேட்டால் கல்வி இயக்குநரை பாருங்கள் என்கிறார். இயக்குநர் அறிவொளியிடம் முறையிட்டால் ஓராண்டுக்கு முன் கடிதம் கொடுக்க வேண்டும் எனக்கூறி பிரச்னையின் முழு விபரம் கேட்க மறுக்கிறார். இம்மாதம் இறுதியில் ஓய்வுபெறும் தலைமையாசிரியர்கள் கடும் மனஉளைச்சலில் தவிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment