அரசு ஊழியரை தாக்கும் குற்றத்திற்கு சிறை தண்டனையை குறைக்க பரிந்துரை - Asiriyar.Net

Friday, December 1, 2023

அரசு ஊழியரை தாக்கும் குற்றத்திற்கு சிறை தண்டனையை குறைக்க பரிந்துரை

 

அரசு ஊழியரைத் தாக்குவது அல்லது பணி செய்யவிடாமல் தடுப்பது போன்ற குற்றத்திற்கு வழங்கப்படும் இரண்டு ஆண்டு சிறை தண்டனையை ஓராண்டாக குறைக்க வேண்டும் என பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.


இந்திய தண்டனை சட்டம் உட்பட மூன்று குற்றவியல் சட்ட திருத்த மசோதாக்கள் லோக்சபாவில் கடந்த ஆக. 11ல் தாக்கல் செய்யப்பட்டன.


இதன்படி 1860ல் அறிமுகமான இந்திய தண்டனை சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா என்றும் 1898ல் அறிமுகமான குற்றவியல் நடைமுறைச் சட்டம் பாரதிய நாகரிக் சன்ஹிதா என்றும் 1872ல் அறிமுகமான இந்திய சாட்சிகள் சட்டம் பாரதிய சாக் ஷயா அதினீயம் என பெயர் மாற்ற மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டன.


இந்த மூன்று சட்டங்களை பா.ஜ. - எம்.பி. பிரிஜ் லால் தலைமையிலான உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வு செய்தது. அதில் நிலைக்கு குழு உறுப்பினர்கள் சிலர் ஐ.பி.சி. எனப்படும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 353வது பிரிவும் அதற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதாவின் 130வது பிரிவும் ஒத்திருப்பதை சுட்டிக்காட்டினர்.


இந்த பிரிவின் கீழ் அரசு ஊழியர்களை தாக்குவது அவர்களை பணி செய்யவிடாமல் தடுப்பது ஆகிய குற்றங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.


இந்த சட்டத்தை அரசியல் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது தவறாக பயன்படுத்திய நிகழ்வுகளை பார்லிமென்ட் நிலைக்குழு உறுப்பினர் சிலர் சுட்டிக் காட்டினர். இதை ஏற்ற உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு புதிய சட்டத்தின் 130வது பிரிவின் கீழ் தண்டனையை ஓராண்டாக குறைக்க பரிந்துரை செய்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad