பணி விதிகளின்படி தகுதி இல்லையென்றால், அரசு வேலை பெற உரிமையில்லை - உயர் நீதிமன்றம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 30, 2023

பணி விதிகளின்படி தகுதி இல்லையென்றால், அரசு வேலை பெற உரிமையில்லை - உயர் நீதிமன்றம்

 
அரசு கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், விண்ணப்பங்களை வரவேற்றது. கோபிகிருஷ்ணா என்பவர் அளித்த விண்ணப்பத்தை, தேர்வு வாரியம் நிராகரித்தது.


சர்ச்சை இல்லை


இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தள்ளுபடி செய்தார். அதைத் தொடர்ந்து, கோபிகிருஷ்ணா, மேல்முறையீடு செய்தார். மனுவை, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன், வழக்கறிஞர் கே.சதீஷ்குமார் ஆஜராகினர்.


மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, தேர்வு வாரியம் நிர்ணயித்துள்ள தகுதியை, மனுதாரர் பெற்றுள்ளார். நிர்ணயித்த முறைப்படியே தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பதால், மனுதாரர் தகுதியை செல்லாது எனக் கூற முடியாது, என்றார்.


இரு தரப்பு வாதங்களுக்கு பின், இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


மனுதாரரைப் பொறுத்தவரை, கல்வித் தகுதியை பெற்றுள்ளார் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆனால், அந்த தகுதி, அரசாணையில் குறிப்பிட்டுள்ள முறைப்படி பெறப்பட்டதா என்பது தான் கேள்வி.கடந்த 2009 ஆகஸ்டுடில் பிறப்பித்த அரசாணைப்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2, மூன்றாண்டு பட்டப்படிப்பு என்ற வரிசையில் தான், கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். அதாவது, 10ம் வகுப்பு, பிளஸ் 2க்கு பின்னரே, பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.தமிழக அரசு பிறப்பித்த இந்த அரசாணை செல்லும் என, ஏற்கனவே உயர் நீதிமன்றமும் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின், என்ன காரணங்களாலோ, பிளஸ் 2 படிக்கவில்லை.


ஏற்கவில்லை

பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, தேசிய தகுதி தேர்வு என, அனைத்து தகுதிகளையும் பெற்ற பின், 2019ல் தனித் தேர்வு வாயிலாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளார். பிளஸ் 2 படிப்புக்கு முக்கியத்துவம் இல்லை என்றால், அதை மனுதாரரும் படித்திருக்க மாட்டார்.ஆனால், பல ஆண்டுகளுக்கு பின், அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். அரசாணையை கவனத்தில் கொண்டுள்ளார். எனவே, பிளஸ் 2 தகுதி பெறுவது கட்டாயம். அந்த தகுதியை, பட்டப்படிப்பில் சேர்வதற்கு முன் பெற்றிருக்க வேண்டும். உதவிப் பேராசிரியருக்கான தகுதியை பெற்றிருந்தும், பிளஸ் 2 படிப்பை கடைசியில் முடித்துள்ளார். இந்த நடைமுறையை, நீதிமன்றம் ஒருபோதும் ஏற்கவில்லை.


பணி விதிகளின்படி அல்லது அறிவிப்பாணையின்படி, தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், வேலை பெற உரிமையில்லை. மனுதாரர் பெற்றுள்ள கல்வித் தகுதி, அரசு நிர்ணயித்த முறைப்படி இல்லாததால், வேலை பெறுவதற்கு அவை செல்லத்தக்கதாக கூற முடியாது.மனுதாரர் மீது இரக்கம் கொள்ளலாம்; அவருக்கு நிவாரணம் வழங்க, சட்டம் அனுமதிக்கவில்லை. 


பார்லிமென்ட், சட்டசபை இயற்றும் சட்டங்கள் வாயிலாக, பல்கலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.திறந்தநிலை பல்கலைகளும், சட்டத்தின் வாயிலாக தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என, ரெகுலர் முறையில் படிக்காதவர்களுக்கு கல்வி வழங்குவது தான், இந்த பல்கலைகளின் நோக்கம். 


இவை, தகுதியானவர்களுக்கு பட்டங்கள் வழங்குகின்றன.மறுக்கின்றனசட்டங்களின் வாயிலாக ஏற்படுத்தப்படும் பல்கலைகள், இந்த கல்வித் தகுதிகளை வழங்கும்போது, அவற்றை அரசு பணிக்கு ஏற்காமல், அரசு துறைகள் மறுக்கின்றன. இத்தகைய படிப்பை படித்த மாணவர்களின் நிலை பரிதாபமானது.


எனவே, சமூக நலன் கருதி, இந்த விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் மறுஆய்வு செய்யலாம். அதுவரை, இருக்கிற சட்டத்தைத் தான் நீதிமன்றம் கணக்கில் கொள்ள முடியும். மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Post Top Ad