துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தென் மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு இன்று அதிதீவிர கன மழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்யும். இந்த பகுதிகளில், மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் காற்றுடன், இடி, மின்னலுடன் மழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு 20 செ.மீ., வரையில் பெய்வதற்கான, ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு, இன்று முற்பகல் வரை அதிதீவிர கனமழைக்கான 'ரெட் அலெர்ட்' விடப்பட்டுள்ளது. நாளை தென் மாவட்டங்களில் சில இடங்களில், வட மாவட்டங்களிலும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது.
அதேபோல், அரபி கடலிலும், கேரளா கடலோரம், லட்சத்தீவு, தென் கிழக்கு அரபி கடல் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. எனவே, மீனவர்கள் நாளை வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
150 ஆண்டுகளில் இல்லாத மழை
பாளையங்கோட்டையில் நேற்றிரவு 8:30 மணி நிலவரப்படி 30 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இது, கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகளவு மழை பதிவாகி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் என சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படும் பிரதீப் ஜான், தன் பதிவில், 'கடந்த 1871ம் ஆண்டு பாளையங்கோட்டையில் 29.2 செ.மீ., மழை பதிவானது தான் இதுவரை அதிகபட்சமாக இருந்தது. தற்போது 8.30 மணி நிலவரப்படி பதிவான மழையின் அளவு 30 செ.மீ., மழை பதிவாகி உள்ளது' என்றார்.
No comments:
Post a Comment