திறந்த நிலை பல்கலைக்கழக பட்டங்களை அரசு வேலைவாய்ப்புக்கு ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 31, 2023

திறந்த நிலை பல்கலைக்கழக பட்டங்களை அரசு வேலைவாய்ப்புக்கு ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

 திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசின் வேலைவாய்ப்புக்கு ஏற்க மறுப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. 


இப்பணிக்கு விண்ணப்பித்த கோபி கிருஷ்ணா என்பவர் 10-ம் வகுப்புக்குப் பிறகு நேரடியாக திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலமாக இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்று, அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு தனித்தேர்வு எழுதி 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக்கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது


இதை எதிர்த்து கோபி கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘கடந்த 2009-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி 10 + 2 + 3 என்ற அடிப்படையில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, அதன்பிறகு இளநிலைப் பட்டம் என்ற வரிசையில் கல்வி கற்றவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாணையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனால் மனுதாரர் 10-ம் வகுப்புக்குப்பிறகு நேரடியாக முனைவர் பட்டமே பெற்றுவிட்டார்.


அதன் பிறகு 12-ம் வகுப்பை படித்து அதிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த தலைகீழ் நடைமுறையை யாரும் அங்கீகரிக்கவில்லை. அரசு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதியின்படி உரிய தகுதியை மனுதாரர் பெறவில்லை என்பதால் அவர் மீது இரக்கம் மட்டுமே காட்ட முடியும். அரசு வேலைவாய்ப்பை வழங்க வேண்டுமென நிவாரணம் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.


அதேநேரம், வழக்கமான நடைமுறைப்படி கல்வியைப் பெற முடியாதவர்களுக்காகவே திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களை உருவாக்கி நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் மத்திய, மாநில அரசுகள் சட்டங்களை உருவாக்கியுள்ளன. ஆனால் இந்த திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசு வேலைவாய்ப்புக்கு ஏற்க மறுப்பதால் பல விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டு வழக்கு தொடரும் அவலம் ஏற்பட்டுள்ளது.


எனவே சமூக நலன் கருதி திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை ஏற்க மறுப்பதை மத்திய, மாநில அரசுகள் மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை தற்போது அமலில் உள்ள சட்டங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும், எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.வழக்கமான நடைமுறைப்படி கல்வியை பெற முடியாதவர் களுக்காகவே திறந்த நிலைப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.


Post Top Ad