புயல் நிவாரண நிதி தர ஆசிரியர்கள் தயக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 16, 2023

புயல் நிவாரண நிதி தர ஆசிரியர்கள் தயக்கம்

 

சென்னை புயல் நிவாரண நிதிக்கு, ஒரு நாள் ஊதியம் தர ஆசிரியர்கள் பலர் தயக்கம் காட்டிஉள்ளனர். சங்கங்களின் முடிவுகளை விமர்சித்து, சமூக வலைதளங்களில், ஆசிரியர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணி மேற்கொள்வதற்காக, அரசு ஊழியர்கள், பொதுமக்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோர் நிதியுதவி அளிக்க, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.


இதை ஏற்று, தி.மு.க., ஆதரவு ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை, நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர். ஜாக்டோ ஜியோ தீர்மானம் நிறைவேற்றியது.


ஆனால், சங்கங்களில் உறுப்பினராக உள்ள ஆசிரியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து, சமூக வலைதளங்களில், ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள பதிவுகள்:


 ஜாக்டோ ஜியோ, அரசிடமிருந்து நமக்கு சட்டப்படி சேர வேண்டிய நிதியை வாங்கி கொடுப்பாங்கன்னு பார்த்தா, நம்மகிட்ட இருக்க பணத்தை, அரசாங்கத்திடம் கொடுக்க சொல்றாங்களே?


 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சேர வேண்டிய ஊதிய முரண்பாடுகளை களைய, அரசு குழு தான் அமைத்துள்ளது. அதேபோல், நிவாரண நிதி வழங்க ஆசிரியர்களும் குழு அமைத்து ஆலோசிப்பர். குழுவின் அறிக்கை 3 மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பரிசீலனை செய்யப்படும்


 அரசின் நிதி நிலைமை போல், குடும்பத்தின் நிதி நிலைமையை ஆலோசித்து, படிப்படியாக வழங்கப்படும்


 சென்னைக்கு புயல் நிவாரண நிதிக்கு ஒரு நாள் அல்ல, ஒரு மாத சம்பளம் கொடுக்கலாம். ஆனால், ஆசிரியர்களின் விருப்பம் கேட்டு தான், ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டும்


 தி.மு.க.,அரசு ஏற்கனவே, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, நாம் அவர்களுக்கு வாக்குறுதி எதுவும் தர வேண்டாம்.


இவ்வாறு பல்வேறு விதமான கருத்துகள், ஆசிரியர்கள் குழுவில் உலா வருகின்றன.


'விருப்பம் உள்ளவர்களிடம் பெறட்டும்'

ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:புயல் நிவாரணத்திற்கு அரசு கேட்டாலும், கேட்காவிட்டாலும், எங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை, ஒவ்வொரு மாதமும், பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் செலவிட்டு வருகிறோம். அதேநேரம், அரசு உரிமையுடன் கேட்கும் போது, அரசு எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, நாங்களும் உரிமையுடன் கேட்போம்.


முதல்வரும், அமைச்சர்களும் தங்களின் ஒரு நாள் சம்பளமான, சில லட்சங்களை நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களால், பல கோடியில் நிதி அளிக்க முடியும். ஆசிரியர்களின் சில ஆயிரங்களை பெற்று தான், அரசு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லை. எனவே, விருப்பம் உள்ளவர்களிடம் மட்டும் நிவாரண நிதியை பெற்று கொள்ளட்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Post Top Ad