கூட்டுறவு சங்கங்களில் விடுபட்ட நகைக்கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வந்தாச்சு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 1, 2023

கூட்டுறவு சங்கங்களில் விடுபட்ட நகைக்கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வந்தாச்சு

 



தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் தகுதியிருந்தும் விடுபட்ட நகைக்கடன் பயனாளர்கள் 5000 பேருக்கான தள்ளுபடி அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இந்த தொகையை சங்கங்களுக்கு உடனடியாக அரசு விடுவிக்க வேண்டுமென கூட்டு றவுத்துறை அதிகாரிகள் கோருகின்றனர்.


2021, மார்ச் 31 ல் கடன் சங்கங்களில் 5 பவுன், அதற்கும் கீழே நகைக்கடன் வைத்துள்ள பயனாளர்களுக்கு தள்ளுபடி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. ஓராண்டு கழித்து ரூ.6000 கோடிக்கான தள்ளுபடி பட்டியலை வெளியிட்டது. இதில் தகுதியிருந்தும்விடுபட்ட பயனாளர்கள் கூட்டுறவு துணைப்பதிவாளர் மூலம் அரசுக்கு மேல் முறையீடு செய்யலாம் என அரசு தெரிவித்தது. 


5000க்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு செய்ததில் ஒன்றே முக்கால் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட்டியல் பரிசீலனை செய்யப்பட்டது. 5000 பேர் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் என்று முடிவு செய்து பயனாளர்கள் பட்டியலை அரசு பரிந்துரைத்தது. 


தற்போது இவர்களுக்கும் வட்டி, அசல் பெறாமல் கடன் சங்கங்கள் நகைகளை வழங்க வேண்டும். ஏற்கனவே ரூ.6000 கோடிக்கான தள்ளுபடி தொகையில் சங்கங்களுக்கு 60 சதவீத தொகையே அரசு அளித்துள்ளது. இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என கடன் சங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


அவர்கள் கூறியதாவது:


நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பால் லாபத்தில் இயங்கி வந்த பெரும்பாலான சங்கங்கள் நஷ்டத்தை நோக்கி சென்றுள்ளன. அரசிடம் இருந்து 40 சதவீத தொகை இன்னும் கிடைக்கவில்லை.


தற்போது 5000 பேருக்கான தள்ளுபடி அறிவிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொருவரும் தலா ரூ.60ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை கடன் பெற்றிருந்தால் கூட மொத்தமாக ரூ.300 முதல் ரூ.500 கோடி வரை தள்ளுபடி தொகை நிலுவை ஏற்படும். இது சங்கங்களை இன்னமும் பலவீனமாக்கி விடும்.


அதுமட்டுமின்றி அரசாணை வெளியிட்டபின் துணைப்பதிவாளர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய பின்பே நகைக்கடன் வழங்க வேண்டும். ஆனால் துணைப்பதிவாளர்கள் அனுமதி தராமல் கடன் சங்க செயலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது தவறான நடைமுறை. நகைக்கடன் தள்ளுபடியில் சிக்கல் என்றால் நாங்கள் தான் மாட்டிக் கொள்வோம் என்றனர்.


Post Top Ad