தொடக்க, நடுநிலை பள்ளிகளை திறக்க திட்டமா? - Asiriyar.Net

Thursday, September 9, 2021

தொடக்க, நடுநிலை பள்ளிகளை திறக்க திட்டமா?

 




தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக அரசு பிறப்பித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. பள்ளி, கல்லூரிகள் கடந்த 1ம் தேதி முதல்வர் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோன்று கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கல்லுாரிகள், உயிரியல் பூங்காக்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில தினங்களாக, தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டு வந்தாலும் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் லேசாக அதிகரித்துள்ளது. கொரோனா இல்லாத நிலை ஒரு மாவட்டத்திலும் ஏற்படவில்லை. கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து வரும் 12ம் தேதி தமிழகம் முழுவதும், குறிப்பாக கேரளா மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் 10 ஆயிரம் முகாம் நடத்தி ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொது இடங்களில் சிலை வைத்து வழிபடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.


இந்த சூழ்நிலையில், கொரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், கலைவாணர் அரங்கில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், வருவாய் நிர்வாக ஆணையர், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர், சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில், தமிழகத்தில் 9, 10, 11, 12ம் வகுப்புகளை தொடர்ந்து தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா அதிகரிக்கும் பகுதிகளில் அதிகாரிகளே கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.


தமிழகத்தில், 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் பள்ளிக் கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் வரும், 14ம் தேதி நடக்கிறது.


தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, செப்., 1ல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கின்றன. வரும், 15ம் தேதிக்கு பின், எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்தலாமா என, தமிழக அரசின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது.


இதுகுறித்து, தமிழக தலைமை செயலர் இறையன்பு தலைமையில், பல்வேறு துறை செயலர்கள் தலைமையில், ஆலோசனை நடந்தது.இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான சி.இ.ஓ.,க்களுக்கான ஆலோசனை கூட்டம், வரும், 14ம் தேதி சென்னையில் நடத்தப்படும் என, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'பள்ளி கல்வியின் பல்வேறு இயக்குனரக பணிகள் குறித்து, தனித்தனியாக பட்டியலிட்டு, இதற்கான விபரங்களுடன் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணயம், அங்கீகாரம் நீட்டிப்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் தனிப்பிரிவில் பெறப்பட்ட மனுக்களுக்கான தீர்வு, அங்கீகாரம் இல்லாத பள்ளி விபரம்.பாலியல் பிரச்னைகளை தீர்க்க கமிட்டி அமைத்தல், ஆசிரியர்களுக்கு பயிற்சி ஆகியவை குறித்து, கூட்டத்தில் பேசப்பட உள்ளது.


மேலும், அரசின் முடிவுக்கு ஏற்ப தொடக்க, நடுநிலை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும், கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

Post Top Ad