கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக, 38 மாவட்டங்களில் கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செப்., 1 முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப் படுகின்றன. பள்ளிகளில் நடத்திய சோதனைகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிலருக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாணவர்களும், ஆசிரியர்களும், பள்ளிக்கு வராமல் இருந்த காலத்தில், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், தொற்று எண்ணிக்கை தெரியாமல் இருந்தது. தற்போது பள்ளிகளுக்கு வருவதால், தொற்று எளிதில் கண்டறியப்படுகிறது.இந்த வகையில் நேற்று வரை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, 40 பேர் வரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 38 மாவட்டங்களிலும் அரசு, தனியார் பள்ளிகளில் கள ஆய்வு நடத்த உத்தரவிட பட்டு உள்ளது.கொரோனா பரவலுக்கான காரணங்கள் என்ன; மாணவர்களுக்கு மற்ற மாணவர்களால் பரவுகிறதா அல்லது மற்ற பொதுமக்களிடம் இருந்து மாணவர்களுக்கு பரவுகிறதா என்பதை கண்டறிந்து, அறிக்கை அளிக்குமாறு, கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.