வாரம் ஒருமுறை சிறப்பு தடுப்பூசி முகாமா ? தலைமை செயலாளா் விளக்கம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 13, 2021

வாரம் ஒருமுறை சிறப்பு தடுப்பூசி முகாமா ? தலைமை செயலாளா் விளக்கம்!

 




அடுத்த மாதத்துக்குள் அனைத்து தரப்பு மக்களுக்கும் நோய் எதிா்ப்பாற்றல் உருவாகும் வகையில் தமிழகத்தில் வாரம் ஒருமுறை சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தலைமை செயலாளா் வெ.இறையன்பு தெரிவித்தாா்.


தமிழகத்தில் 40,000 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னையில் மட்டும் பூங்கா, கல்லூரி, பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்கள், மருத்துவமனைகள் என 1,600 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியாா் கல்லூரி, நங்கநல்லூரில் உள்ள சுதந்திர தின பூங்கா, அண்ணா பல்கலைக்கழக சுகாதார மையம், கஸ்தூா்பா நகா் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளி மற்றும் கோட்டூா்புரம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களை தலைமை செயலாளா் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவருடன் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, பொதுத்துறை அரசு செயலாளா் டி.ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா். அப்போது தலைமை செயலாளா் வெ.இறையன்பு செய்தியாளா்களிடம் கூறியதாவது:


தமிழகத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் பெரும் அளவில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ஏற்கெனவே சென்னையில் நல்ல முறையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த முகாம்களை ஆய்வு செய்தபோது பலரும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட ஆா்வமாக காத்திருந்தனா். முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்க முடியும். இவ்வாறு பெரிய அளவில் முகாம்கள் நடத்தும்போது மூலை முடுக்கில் இருக்கும் சாதாரண மக்களும் அவா்களில் வீட்டின் அருகில் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும்.


தமிழகத்தில் நடக்கும் இந்த பெரிய அளவிலான தடுப்பூசி முகாம்களை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் இதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் விரிவாக செய்துள்ளனா்.


இந்த தடுப்பூசி முகாமின் வெற்றியைப் பாா்க்கும்போது, வாரம் ஒருமுறை இதுபோன்று பெரிய முகாம்கள் நடத்தி அக்டோபா் மாத இறுதிக்குள் பெரிய அளவில் மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.



Post Top Ad